பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அவசிய நிலை ஏற்படின் தங்கும் இடமும் இலவசமாக அளிக்கப்பட்டது. அத்துடன் இம் மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்ப் பிரிவுக்கும் தனித்தனிப் பகுதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

மனநோய் மருத்துவமனைகள்

உடல் நோய்க்கு மட்டுமல்லாது உளநோய்க்கும் மருத்துவம் செய்ய வழி காணப்பட்டது. பைத்திய வைத்தியத்திற்கென தனி மனநோய் மருத்துவமனைகள் இஸ்லாமிய நாடெங்கும் உருவாக்கப்பட்டன. மனநோயாளிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் கவனிக்கப்பட்டார்கள்.

அக்காலத்தில் மனநோய் மருத்துவமனைகள் உட்பட, நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் வேதனைகளைக் குறைக்கவும் அவர்கட்கு நம்பிக்கையூட்டவும் அவர்களின் மன நிலைகளைச் செழுமையாக வைத்திருக்கவும் இசைவாணர்கள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணியாற்றினர் என்ற குறிப்பு நோயாளிகள் எந்த அளவுக்கு மனிதத் தன்மையோடும் நேயத்தோடும் நடத்தப்பட்டனர் என்பதைத் தெளிவாக்குகிறது.

பெண் நோயாளிக்கென தனி மருத்துவப் பகுதி

அக்கால மருத்துவமனைகளில் மற்றொரு தனிச்சிறப்பு உண்டு. அதுதான் பெண் நோயாளிக்கென தனிப் பகுதி இருந்ததாகும். அங்கே பெண் மருத்துவர்களே பெண் நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்தனர். மருத்துவமனைகள் மிகப் பெரிய கட்டிடங்களில் இயங்கின. சுல்தான் சலாஹுத்தீன் தனது அரண் மனைகளில் ஒன்றை மருத்துவமனை அமைக்க வழங்கினார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றில் காணும் செய்தியாகும்.