பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

பொருட்களைக் கொண்டு, பழைய கட்டுமான பொறியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இதே போன்று புதிய ஜெத்தா விமான நிலையம் ஹஜ் பயணப்பகுதி கூடார வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும்போது அராபியர்கள் வழக்கமாக் பாலை வனத்தில் அமைக்கும் கூடாரங்களுக்குள் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அண்மையில் புனித ஹஜ் பயணம் சென்றிருந்தபோது இதனை என்னால் நேரடியாக உணரமுடிந்தது. இக்கட்டுமானம் அமெரிக்காவின் புகழ் பெற்ற முஸ்லிம் கட்டுமான பொறியியல் வல்லுநரான பசுலுர்கான் என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். தனித்தனிக் கூடாரங்கள் போல் தோற்றமளிக்கும் 210 கூடாரங்கள் ஒன்றிணைந்து அமைந்துள்ளன மரபொழுங்கோடு அமைந்த இதன் கூடாரக் கூரைகள் பெஃப்லான் வேதிப்பூச்சுக் கொண்ட ஃபைபர் கிளாஸ் ஃபைபரால் ஆனதாகும். இக்கட்டுமானம் பற்றி பசுலுர் கான் கூறுகிறார்:

“நான் 1986 ஆம் ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திருந்தேன். அரஃபாத் பெருவெளியில் கூடாரத்தில் தங்கியிருந்தபோது இந்த சூழ்நிலையை ஹஜ் கடமையாற்ற விமானம் மூலம் ஜெத்தா வரும் பயணிகளுக்கு வரும் போதே ஏற்படுத்த வேண்டும் என்ற வேட்கையின் விளைவாக உருவானதே இக்கூடார கட்டுமான வடிவமைப்பு.”

மேனாட்டுக் கட்டுமான பொறியியல் முறைகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே கையாள்வதைவிட அப்பகுதியின் சமூக அமைப்பின் தன்மையையும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையையும் கருத்திற்கொண்டு அப்பகுதியின் மரபொழுங்கு சிறிதும் மாறாமல் நவீன கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே சாலச் சிறந்தது என்ற உணர்வை இதன்மூலம் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார் இவ்வுணர்வே பண்டு தொட்டு இருந்து வரும் இஸ்லாமிய கட்டுமான பொறியியலின் அடிப்படை அம்சமாகும்.