பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அறிவியல் சாதனைகளுமே குறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும், அடுத்து வந்த 250 ஆண்டுகளில் அறிவியல் துறையில் அருஞ்சாதனை நிகழ்த்தியவர்களாக இப்னுருஷ்து, நஸிருத்தீன் தூஸீ, இப்னு நபீஸ் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன

அறிவியல் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் சார்ட்டனின் கணிப்பிலிருந்து கி.பி. 750-லிருந்து கி பி. 1350 வரை சுமார் 600 ஆண்டுக்காலம் அறிவியல் துறை வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க முஸ்லிம்களாலேயே நடைபெற்று வந்துள்ளது என்பது வரலாற்று பூர்வமாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளது தெளிவாகிறது. அதன் பிறகே, முஸ்லிம்களின் அறிவியல் கண்டுபிடிப்புச் செய்திகள் லத்தீன், ஹிப்ரு மொழி பெயர்ப்புகள் மூலம் ஐரோப்பாவெங்கும் பரவியபின் ஐரோப்பியர்கள் இதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது புலனாகிறது.

“ஞானம் எங்கிருந்தாலும் அதை ஏற்று எடுத்துக்கொள்வது பற்றி நாம் வெட்கப்பட வேண்டியதில்லை மாறாக அது தான் பொருத்தமானது. உண்மையைத் தேடுவோருக்கு அதை எய்துவதைவிட உன்ன தான இலக்கு வேறெதுவுமில்லை. தன்னைத் தேடுபவனை சத்தியம் என்றுமே இழிவுபடுத்துவதில்லை” என்று புகழ் பெற்ற முஸ்லிம் அறிஞர் அல் கிந்தீ ஆயிரத்து நூழு ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க கருத்துரையாகும். இந்த உணர்வும் சிந்தனையும் முஸ்லிம்களின் அறிவியல் முயற்சிகளுக்கு ராஜ பாட்டையாக அமைந்தது. தாங்கள் புத்தறிவைத் தேடிப் பெறுவதில் மிகுந்த நாட்டம் செலுத்தியதைப் போன்றே 'தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பொருள் மொழிக்கொப்ப தங்களது விஞ்ஞான அறிவியல் சாதனைகளை மேனாட்டிற்கு வழங்கவும் முஸ்லிம்கள் தவறவில்லை.