பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115


முஸ்லிம் அறிவியல் வளர்ச்சியில் தேக்கமும் - வீழ்ச்சியும்

பெருமானார் (சல்) காலம் தொடங்கி விரைவு நடைபோட்டு, பின்னர், மின்னல் வேக வளர்ச்சி பெற்ற அறிவுதேடல் முயற்சி. அறிவியல் தேட்டமாக வலுப்பெற்று.எண்ணற்ற விஞ்ஞான விந்தைகளை உலகுக்களித்து உலகின் போக்கையே முற்றாக மாற்றியமைத்த அறிவியல் முயற்சியில் திடீரென ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளால் இத்தேக்க நிலை நலிவாக உருமாறி மாபெரும் சரிவுக்கு வழியாயமைந்துவிட்டது. கி.பி. 1100இல் தொடங்கிய இச்சரிவு கி.பி.1350 வாக்கில் முற்றாக நலியும் நிலை ஏற்பட்டது.

இதற்கு முழு முதற்காரணமாக அமைந்தது இஸ்லாமிய நாடுகள் மீது நடத்தப்பட்ட மங்கோலியப் படையெடுப்பாகும். மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கானின் படையெடுப்பு மக்களின் வாழ்க்கைப் போக்கைப் பெரிதும் தடம் புரளச் செய்தது அறிஞர்கள், விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நிலை குலைந்தன. அரசு ஆதரவு என்பது அடியோடு இல்லாத நிலையில், அதுவரை முஸ்லிம் விஞ்ஞானிகள் பெற்றிருந்த அறிவியல் சாதனைகள் பழங்கதையாக மாறத் தொடங்கின. மத்திய கிழக்கு நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைக்கு மேல் சாதனைப் படைத்து, அங்கிருந்து அவை முஸ்லிம் ஸ்பெயினை அடைந்து, அங்கு அவை அழுந்தக் காலூன்றி வளமடைந்து பூரணமாய் மலர்ந்து மணம் வீசும் தருணத்தில் சிலுவைப் போரின் காரணமாக முஸ்லிம்களின் ஆட்சியுரிமைகள் அடுத்தடுத்து அகற்றப்பட்டன. தங்களின் விஞ்ஞானப் பேரறிவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த முஸ்லிம் அறிவியலாளர்கள் இருந்ததையெல்லாம் இழந்தவர்களானார்கள்.