பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

வளர்ச்சிக்கு அடித்தளமான அடிப்படை விஞ்ஞான அறிவை தம் நாட்டு இளைஞர்கட்கு அளிக்கவோ அல்லது தன்னாட்டில் அடிப்படை விஞ்ஞான அறிவை முறையாகப்பெற்று ஆய்வு செய்ய விழையும் அறிவியல் வல்லுநர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவோ முன் வருவதில்லை இதன் விளைவாக அறிவியல் வல்லுநர்களாகும் முஸ்லிம் விஞ்ஞானிகள் நோபெல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டு அப்துஸ்ஸலாம் போன்ற இயற்பியல் மேதைகள் அமெரிக்க போன்ற நாடுகளில் வாழ்ந்து, அங்குள்ள அறிவியல் சோதனை கள மேம்பாட்டு வசதிகளைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அருஞ்சாதனை புரிய நேர்கிறது.

எனினும். இன்று இஸ்லாமிய நாடுகளில் அறிவியல் வளர்ச்சியைப் பொருத்தவரை ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. இஃது இஸ்லாமிய அறிவியல் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையும் அழுத்தமாக எழுந்துள்ளது.

மேலை நாட்டு அறிவியல் அறிவை மட்டும் மேனாட்டு ஆட்கள் மூலம் பயன்படுத்தி வந்த இஸ்லாமிய அரசுகள் ,இன்று தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கட்கு அடிப்படை அறிவியல் அறிவைக் கற்பிக்கவும், தேர்ந்து வருபவர்கட்கு உயர் அறிவியல் அறிவை அளிக்க மேனாட்டுக்கு அனுப்பியும் அறிவியலாளர்களைப் பெருமளவில் உருவாக்கும் முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய முயற்சியின் விளைவாக அறிவியல் அறிவாற்றல் மிக்கவல்லுநர்களின் தொகை பெருகி வருகிறது. இதற்கு நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் அறிவியல் வளர்ச்சிக்கான அமைப்புகளை உருவாக்கியும் செயல் திட்டங்கள் வகுத்துச் செயலாற்றியும் வருகிறது.