பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 .

நூலாசிரியர்

வளர் தமிழ்ச் செல்வர், கலைமாமணி,

மணவை முஸ்தபா


சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான வளர் தமிழ்ச்செல்வர்,கலைமாமணி, ஹாஜி மணவை முஸ்தபா, சர்வதேச இதழான ‘யுனெஸ்கோ கூரியர்’ தமிழ் மாத இதழின் ஆசிரியராவார்.

‘காலம் தேடும் தமிழ்.’ இளைஞர் இஸ்லாமியக்கலைக் களஞ்சியம்' உட்பட முப்பத்தைந்து தமிழ்நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார். எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார் சர்வதேசதமிழ் ஆராய்ச்சிப் பேரவையின் இந்தியக்கிளை இணைச்செயலாளராக உள்ளார்.

இவரது கலை, ‘இலக்கியப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் 1986 இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியுள்ளது.இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு ‘திரு.வி.க’ விருதை 1989இல் அளித்துப்பாராட்டியது 1995 இல் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு ரூபாய் ஐம்பதினாயிரம் பெற்றார். இவரது அயரா தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹுசைன் கல்லூரி அறிவியல் மன்றம் ‘வளர் தமிழ்ச் செல்வர்’ விருதளித்துப் பாராட்டியுள்ளது. சென்னை சிந்தனையாளர் பேரவை‘அறிவியல் தமிழ்ச் சிற்பி’ பட்டம் வழங்கியுள்ளது.