பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இவனை விட மிக நுட்பமாகச் செயல்படும் பல உயிரினங்கள் இவ்வுலகில் உண்டு. இக்காலக் கட்டடக் கலை வல்லுநர்களே வியந்து போற்றும் வண்ணம், மிக நுட்பமாக சிலந்திகள் வலை பின்னுகின்றன. தேனீக்கள் தேனடைகளை உருவாக்குகின்றன. காற்றில் அலைந்தாடும் தென்னை மட்டை ஓலைகளின் நுனியில் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு வீடு—அதுவும் அறைத் தடுப்புகளோடு கூடிய கூட்டைக் கட்டும் தூக்கணாங் குருவிகளின் கட்டுமானத் திறன் மனிதனையும் விஞ்ச வல்லனவாகும். கறையான் எறும்புகள் உருவாக்கும் புற்றுகளின் ஒழுங்கமைவுடைய கட்டுமானத் திறன் இன்னும் மனிதர்களலேயே முழுமையாக அறிந்துணர முடியாத அற்புத அமைப்புடையதாகும். தொலைத்தகவல் தொடர்பியல் வல்லுநர்களை வியப்பிலாழ்த்தும் வண்ணம் விசித்திர அலைகள் மூலம் செய்தி அறிவிக்கும் ஆற்றல் பெற்றவை டால்பின்கள். ‘ரேடார்’ தொழில்நுட்பத் திறனையே பின்னுக்குத் தள்ளும் வண்ணம் கேளா ஒலிபரப்புத் திறனில் வவ்வால்களை விஞ்சியவனா மனிதன்? கூட்டு லென்சுகள் மூலம் ஒளி பெருக்கும் பார்வை கொண்ட வண்டுகளின் கண் அமைப்பு ஒளி பெருக்குத் திறனுக்கு எடுத்துக் காட்டாகவன்றோ உள்ளது! இன்னும் இது போல எத்தனையெத்தனையோ தனித் திறன் கொண்டஉயிரினங்கள் பல உலகில் இன்னும் உண்டு.

சிந்தனைத் திறனும்
பகுத்தறியும் பண்பும்

வேறு எந்த வகையில் மனிதன் பிற உயிரினங்களினின்றும் உயர்ந்தவனாக—மேம்பட்டவனாக இருக்கிறான் என்பதை மிக நுணுக்கமாக ஆராயும் போதுதான் அந்த வேறுபாடு நமக்கு நன்கு விளங்க வருகிறது. அதுதான் மனிதனிடம் தனித்துவமுள்ள தனிப்பெரும் ஆற்றலாக அமைந்துள்ள சிந்தனைத் திறன் ; பகுத்தறியும் பண்பு.