பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சீனா செல்லப் பணித்தது ஏன்?

அக்காலத்தில் அரேபியாவிலிருந்து சீனா நாடு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நினைத்துப் பார்க்கவியலா இடர்பாடுமிக்க பயணமாகும். பாலைவனங்கள் பலவற்றைக் கடக்கவேண்டும். மலைகள் பல ஏறி இறங்க வேண்டும். காடுகளையும் வனாந்தரங்களையும் கடந்து செல்ல வேண்டும். குறுக்கிடும் ஆறுகளைக் கடப்பதோடு, பரந்து விரிந்து காணும் கடல் நீர்ப் பரப்புகளையும் தாண்டிச் செல்ல வேண்டும். இவ்வளவு தொலை வையும் தொல்லைகளையும் கடந்தாவது சீனம் சென்று சீர் கல்வி பெறுவதில் கருத்தூன்ற வேண்டும் எனப் பெருமானார் கூறியதாகக் கொள்கின்றோம். இதைக் கல்வியின் பெருமைக்குக் கட்டியங் கூறும் அறைகூவலாக எண்ணி மகிழ்கிறோம்.

ஆனால், நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்கும்போது வெறும் தொலைவையும் தொல்லைகளையும் மட்டும் மனதிற் கொண்டா பெருமானார் இக் கருத்தைக் கூறியிருப்பார்? என்ற கேள்வி நம் முன் எழவே செய்கிறது.

அத்தகைய உணர்வில், கருத்தில்தான் பெருமானார் அவ்வாறு கூறியிருந்தார் என்றால் அதே தொலைவில் இருந்த வேறு சில புகழ்பெற்ற நாடுகளுக்கும் கல்வி கற்கப்போகச் சொல்லியிருக்கலாமே! இஸ்லாத்தின் நறுமணம் எப்போதும் வீசிக்கொண்டிருப்பதாகக் பெருமானார்(சல்) அவர்களால் அடிக்கடி புகழப்பட்ட இந்தியாவுக்குச் செல்லுமாறு பணித்திருக்கலாமே!

ஏன் அவ்வாறு சொல்லவில்லை?

இன்னும் ஆழ்ந்து நோக்கின் அக்காலத்தில் கலைகளின் வளர்ப்புப் பண்ணையாக, நாகரிகத்தின் தொட்டிலாகப்