பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

புகழ்பெற்று விளங்கிய ‘மிஸ்ர் நாடு’ என அழைக்கப்பட்ட எகிப்து நாட்டிற்குச் சென்று ‘சீர் கல்வி பெறுக! என ஏன் பணிக்கவில்லை?

அன்று தத்துவச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த உறைவிடமாகத் திகழ்ந்த கிரேக்க நாடு சென்று ‘சீர் கல்வி பெறுக!’ எனக் கூறியிருக்கலாமே! ஏன் அண்ணலெம்பெருமானார் அவ்வாறு கூறவில்லை?

சீன நாட்டை மட்டும் சீர் கல்வி பெறத்தக்க சிறப்பிடமாகப் பெருமானார் அவர்கள் தேர்ந்தெடுத்ததற்குச் சிறப்புக் காரணங்கள் ஏதேனும் இருக்கலாமே?

இந்த வினாவுக்கு விடை காணும் முயற்சியில் முனைப்புக் காட்டும்போது தான் பெருமானார் (சல்) அவர்கள்‘சீர் கல்வி பெற’ ஏன் சீனாவைச் சிறப்பிடமாகத் தோந்தெடுத்தார் என்ற பேருண்மை புலனாகிறது.

அறிவியல் அறிவு பெற விரைவீர் சீனம்

நாயகத் திருமேனி வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் தத்துவச் சிந்தனைகளால் சிறப்புற்ற நாடுகள், கலை வளர்ச்சியில் இமயமென எழுந்து நின்ற நிலப் பகுதிகள், நாகரிக வளர்ச்சியில் வியக்கத் தக்கச் சிறப்புக் கொண்ட நாடுகள், பண்பாட்டின நிலைக்களனாகத் திகழ்ந்த நாடுகள் பல உலகில் இருந்த போதிலும் துரிதமான அறிவு வளர்ச்சிக்கு விறுவிறுப்பும் ஊட்டவல்ல புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அன்று சீன நாட்டில் மட்டுமே வியக்கத்தக்கஅளவில் நிகழ்ந்து வந்தன. புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அறிவியல் வளர்த்து வந்த நாடக சீனநாடு விளங்கி வந்தது.