பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கண் முன்னால் காட்டியிருப்பது போல் வெளிப்படையாகப் படைத்தளிக்கவில்லை. அவற்றை வல்ல அல்லாஹ் மறைபொருளாகவே படைத்தளித்துள்ளான். அவை மண்ணிலும் விண்ணிலும் கடலிலுமாக அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் அவன் தானாகவே, தன் அறிவாற்றல் மூலம் கண்டறிந்து துய்த்து மகிழ வேண்டும் என்பதுதான் இறைநாட்டம். அம் மறை பொருட்களைக் கண்டறிந்து துய்க்கும் வழிமுறையாகத் தான் சிந்திக்கும் ஆற்றலும் ஆராய்ந்து காணும் அறிவுத்திறனும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன.அதன் துணைகொண்டு, ஆய்வு செய்து இறைவனால் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளவற்றைப் தேடிப்பெற இறைவனின் படைப்புகளைப் பற்றிய ரகசியங்களை அறிய — சிந்தனை செய்ய — இடையறா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இறைகட்டளை இதற்காக அவன் மேற்கொள்ளும் ஒரு விநாடி சிந்தனை — முயற்சியானது எழுபதாண்டுத் தொழுகைகுச் சமம் எனப் பெருமானார் கூறியிருப்பதிலிருந்து. மனிதன் அல்லாஹ்வின் படைப்பு ரகசியங்களை அறிந்துகொள்ள இடைவிடா முயற்சி மேற்கொள்ளவேண்டியது மிக மிக அவசியம் என்பது புலனாகும்.

அகம் புறம் வளர்க்கும் மதரஸா

இவ்வாறு அண்ணலாரும் அவரது வாழ்வும் வாக்கும் வல்ல அல்லாஹ்வின் திருமறையாம் திருக்குர்ஆனும் எல்லா வகையிலும் இறைவனுடைய படைப்பு ரகசியங்களை அறிந்து கொள்ள ஆர்வப் பெருக்கோடு மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவே உள்ளது. இதன் காரணமாகவே மறை பயிற்றும் மதரஸாக்கள் அக வளர்ச்சிக்கு அடித்தளமாக மட்டும் அமையாது புற வாழ்வு முன்னேற்றத்துக்கான ஆய்வுக்களமாகவும்