பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஆயிரத்து இரு நூறு ஆண்டுக்கால அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம்

உலகிலேயே மிகப் பழம்பெரும் பல்கலைக் கழகமாக இன்று விளங்குவது எகிப்திலுள்ள அல் அல்ஹர் பலகலைக் கழகமாகும். இஃது ரமலான் ஹிஜ்ரி 361 (கி. பி.972 ஜூ 22இல்) உருவாக்கப்பட்டது இஸ்லாமிய ஞானஅமுது வழங்கும் கற்பக தருபோல் விளங்கி ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு இஸ்லாமிய ஞானப்பால் ஊட்டி வளர்த்து வந்த தீன் நெறிக் களமாகும். ஆன்மீக சுடர் பரப்பி வரும் அப் பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலையை அறியும் உள்ளத் துடிப்புடன் பல்கலைக் கழக வளாகத்துள் புகுந்தேன். பல்கலைக் கழகத்தைச் சுற்றிப்பார்த்தபோது எனக்குப் பல உண்மைகள் புலனாயின.

ஆன்மீகமும் அறிவியலும் இணைந்துள்ள எழிற்காட்சி

மசூதியுடன் இணைந்தே மதரஸாக்கள் உருவாயின் என்பதற்கு இணையற்ற, பண்டைய எடுத்துக்காட்டாக இன்றும் எழிலுடன் விளங்குவது அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமாகும். அக வளர்ச்சிக்கு அடிப்படையான மார்க்கஅறிவு. வாழ்க்கை நெறி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றோடு புற வாழ்வின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஆதாரமான கட்டிடக்கலை, பொருளியல், அறிவியல் சார்ந்த பல்துறை அறிவை வாரி வழங்கும் சிந்தனை ஊற்றாகவும் பன்னெடுங்காலம் பணியாற்றி வந்துள்ள அப்பல்கலைக் கழகத்தில் பாதம் பதித்து நடக்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது, ஆன்மீகத்தையும் அறிவியலையும் இரு கண்களாகக் கொண்டு இன்றும் தன் பணியை வலுவோடும் வனப்போடும் தொடரும் வியப்பூட்டும் பாங்கு வியக்க வைப்பதாயிருந்தது.