பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

“மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றில் மறை பொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும் தன் சொந்த முயற்சியால், அறிவின் துணைகொண்டு சோதனைகளின் உதவியோடு தெளிவாய் புரிந்து கொள்ளும் முயற்சியே அறிவியலாகும்!”

இறைவன் மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் மறைபொருளாய் தந்துள்ள நிலையில், அவைகளையெல்லாம் மனிதன் தன் சிந்தனை அறிவாற்றலால் நன்கு அறிந்து, அவற்றையெல்லாம் பெற்று, வாழ்வின் முழு இன்பத்தை நிறைவாய்ப் பெற்று மகிழ மேற்கூறிய விளக்கத்திற்கேற்ப அறிவியல் நோக்குடையவர்களாய் இருத்தல் அவசியம்.

எனவேதான், அறிவு வேட்கை மிக்கவர்களாய், ஆய்வறிவுடையவர்களாய் ஒவ்வொரு முஸ்லிமும் விளங்க வேண்டுமெனப் பெருமாளார் தூண்டினார்கள். அத்தூண்டலின் விளைவாக ஆன்மீக உணர்வோடு அறிவுத்தாகம் மிக்கவர்களாகப் புதிய செய்திகள், ஆய்வுகள் எங்கெல்லாம் உண்டோ அங்கேயெல்லாம் விரைந்து சென்றார்கள். அறிவுச் செல்வங்கள். சிந்தனை வளமிக்க படைப்புகள் எந்நாட்டில், எம்மொழியில் இருந்தாலும் அவற்றையெல்லாம் அரபி மொழிக்குக் கொண்டுவந்து, அரபி மொழி தெரிந்தவர்கட்கெல்லாம் அறிவமுதம் ஊட்டும் அருந்தொண்டில் ஆயிரமாயிரம் அரபு அறிஞர்கள் ஈடுபடலானார்கள். உலகின் நாலா பக்கங்களுக்கும் பரவிச் சென்று அறிவுத் தேடலில் முனைப்புக் காட்டினார்கள். அறிவியல் சிந்தனைகளை — புதிய புதிய கண்டு பிடிப்பு விவரங்களைத் தேடித் தொகுத்தார்கள்.