பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

உணர்ந்த நண்பர் என் சந்தேகத்தைத் தெளிவாக்க முனைந்தார்

‘கிரேக்க நாடு முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் நீண்டகாலம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இஸ்லாமியக் கோட்பாட்டின்படி மக்களை நல்வழிப்படுத்த இறை தூதர்களாகிய நபிமார்களை உலகெங்கும் இறைவன் அனுப்பியுள்ளான். அவர்கள் எல்லா நாட்டிலும் எல்லா மொழியிலும் எல்லா இனத்திலும் தோன்றி மக்களுக்கு இறைச்செய்தியை உணர்த்தி நல்வாழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அவர்களில் சிலர் ஒரு இன மக்களை வழி நடத்தினார்கள். இன்னும் சில இறைதூதர்கள் ஒரு மொழி பேசும் மக்களின் உயர்வுக்காக கடைத்தேற்றத்துக்காக உழைத்துள்ளார்கள். இன்னும் சில நபிமார்கள் ஒரு நாட்டுமக்களையே சிந்திக்கத் தூண்டி, செயலூக்கம் பெறச்செய்து உய்தி பெற நெறி வகுத்துச் சென்றுள்ளனர். இத்தலைவர்களில் சிந்திக்கத் தூண்டி, தக்க காரண காரியங்களோடு செயல்படத் தூண்டிய சாக்ரட்டீஸும் அவரது மாணவர் பிளேட்டோவும் கிரேக்க நாடு பெற்ற இறைதூதர்களாக இருக்கலாம் என்ற உணர்வில் அவர்கள் சமாதியை நினைவுச் சின்னமாக்கியுள்ளனர் கிரேக்கத்தை ஆண்ட அன்றைய முஸ்லிம் மன்னர்கள். ஏனெனில், இவர்கள் போதித்த போதனைகள். தூண்டிய சிந்தனைகள் அனைத்துமே இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தனவாகும் எனவே, அவர்ளை ஏதென்ஸின் வட்டார இறை தூதர்களாக கருதி, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இத்தகயை தர்காவாக நினைவிட மாக ஆக்கியுள்ளனர்’ என ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தியபோது நான் பேருவகையுற்றேன். அவர்கள் நினைவிடமான தர்காவுக்குச் சென்று பார்த்து வந்தேன். சாக்ரட்டீஸ், பிளேட்டோவுக்குப் பின் அவர் தம் வழி முறையினரான அரிஸ்டாட்டிலின் வளமான அறிவியல் கருத்துக்களும் சிந்தனை உணர்வுகளும் பிற்காலத்தில் முஸ்லிம்களின் அறிவுத் தேடலுக்கு ஆதாரமாயமைந்தன.