பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அலெக்ஸாண்டிரியாவிலிருந்த யூக்ளிட், தாலமி போன்றோர் கிரேக்க அறிவியல் சிந்தனைகளுக்கு மேலும் வளமூட்டிச் செழுமைப்படுத்தினர். பின்னர், இதனுடன் பாரசீக, இந்திய அறிவியல் அம்சங்களும் நுணுக்கங்களும் கலக்கலாயின. அறிவுத் தேடலில் முனைப்புக் காட்டிய முஸ்லிம்களால் இவ்வறிவியல் கருத்துக்களும் கொள்கைக் கோட்பாடுகளும் அரபி மொழியில் பெயர்க்கப்பட்டு, இஸ்லாமிய அறிவியலாக செயல் வடிவம் பெற்றுச் சிறப்படையலாயின. அது வரையில் நத்தை வேகத்தில் நடைபோட்டு வந்த அறிவியல் துறை முஸ்லிம்களின் முனைப்பினால் துடிப்பு மிக்கக் காளையைப்போல் துள்ளுநடைபோட்டு விரைந்து வளரலாயிற்று.

செயல் வடிவிலா அறிவியல் சிந்தனை

கிரேக்க நாட்டுத் தத்துவச் சிந்தனைகளுடன் அறிவியல் சார்புடைய கருத்துக்கள் பலவும் நூல்களெங்கும் விரவிக் கிடந்த போதிலும் அவை அனைத்தும் வெறும் சொற்றொடர்களாக, கொள்கை, கோட்பாடுகளாகவே கருதப்பட்டு வந்தனவே தவிர, அவற்றிற்குச் செயல் வடிவம் தந்து நிறுவும் வழிமுறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை.

யூக்ளிட் போன்ற கிரேக்கக் கணித மேதைகள் அறிவியலின் அடிப்படையாக அமையவல்ல கணிதவியலைப் பற்றிய அடிப்படைக் கணிதக் கோட்பாடுகளைக் கூறியிருந்த போதிலும், அவற்றைப் பல்வேறு வகைகளில் கணித்தறிந்து கணிதவியல் உண்மைகளைக் கண்டறியக்கூடிய சோதனை முறைகளை — ஆராய்ச்சி வழிகளை வகுத்துரைக்கவில்லை.