பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

அல்ல! எண்ணூறு ஆண்டுகள் இஸ்லாமியர் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அரசோச்சி வளர்ந்து உச்ச வளர்ச்சி பெற்றன. இஸ்லாமிய நாடுகளில்லிருந்து இந்த அறிவியல் ஆராய்ச்சி மூலம் வீசிய அறிவாெளி உலகெலாம் பரவி, அறிவுச் சுடர் கொளுத்தி இன்றைய அறிவுலக வளர்ச்சியாக விஞ்ஞான விந்தைகளாகப் பரிமாணம் பெற்றன என்பதுதான் கடந்தகாலஅறிவியல் வரலாறு தரும் செய்தி. இதற்கான ஆழமானஅழுத்தமான அடித்தளத்தை அழகுற அமைத்த பெருமை,அறிவியல் ராஜபாட்டை உருவாக உந்து சக்தியாக விளங்கிய சிறப்பு அண்ணலார் அவர்களையும் திருமறையை யுமே சாரும்.

உலக அறிவியல் மொழி அரபி

உலகெங்கும் அறிவை — புதிய செய்திகளை கண்டுபிடிப்புகளை அறிந்துவரச் சென்ற முஸ்லிம்கள் தாங்கள்சென்ற நாடுகளில் புகழ் பெற்று விளங்கிய நூல்களையெல்லாம் தக்கவர்களைக் குழுவாகக் கொண்டு மொழிமாற்றம் செய்து அரபு மொழிக்கு இறக்குமதி செய் தனர். இம்மொழி பெயர்ப்பு அமைப்பு ‘பைத் அல்ஹிக்மா’ அதாவது ‘அறிவு இல்லம்’ என அழைக்கப்பட்டது.

இவ்வாறு கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்துபத்தாம் நூற்றாண்டு வரை (ஹிஜிரி முதல் மூன்று நூற்றாண்டுகள் ) உலக அறிவியல், தொழில் நுட்ப ஆய்வுச்செய்திகளில் பெரும்பாலானவற்றை அரபு மொழியில்கொண்டு வந்து சேர்த்தனர். அரபு மொழியில் இல்லாத அறிவுச் செல்வங்கள் உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லை என்ற நிலையை முனைந்து உருவாக்கினர். இதனால் இலக்கிய, இலக்கண வளம் செறிந்த அரபு மொழி ‘அறிவியல் மொழி’ எனும் மகுடத்தோடு விளங்கலாயிற்று. கி பி. பத்தாம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் சொந்தவிஞ்ஞான வளர்ச்சியில் கருத்தூன்றலாயினர்.