பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மருத்துவ ஆய்வுக்கு அடிப்படை வகுத்த மொழிபெயர்ப்பாளர்

கிரேக்க விஞ்ஞான நூல்களின் பல அறிவியல் பிரிவுகளைப் ‘பைத் அல் ஹிக்மா’ குழுவினர் மொழி பெயர்த்தனர். அவர்களுள் கிரேக்க மொழியில் இருந்த அனைத்து மருத்துவ நூல்களையும் அரபி மொழியில் பெயர்த்தளித்த பெருமை ஹுனைன் இப்னு இஸ்ஹாக் அல் இபாதி (819 - 873) என்பவரையே சாரும். இவர் வெறும் மருத்துவராக — மொழி பெயர்ப்பாளராக மட்டும் இல்லாது ஆராய்ச்சி அணுகுமுறைகளை வகுத்த பெருமைக்குரியவருமாவார். இவர் வகுத்த ஆய்வு விதி அடிப்படையிலேயே மருத்துவ ஆராய்ச்சிகள் அன்று நடைபெற்று வந்தன எனலாம். பிற்காலத்தில் இதுவே ஒரு சில மாற்றங்களுடன் முழுமைப்படுத்தப்பட்டது.

ஆரோக்கியத்திற்கு ஆறு விதிகள்

இவரே ஒவ்வொருவரும் நோய் நொடி ஏதுமின்றி நல்ல உடல் நலத்தோடும் வளத்தோடும் வாழ ஆறு விதிகளைக் கடைப்பிடித்தொழுகுமாறு கூறினார். அவையாவன : சுத்தமான காற்று ; அளவோடு உண்ணலும் பருகலும்; உழைப்பும் அதற்கேற்ப ஓய்வும், தேவையற்ற கழிவை வெளியாக்கல்; உணர்ச்சி மாறுபாடுகள், செயற்பாடுகள் ஆகியவற்றில் கவனமுடன் ஒவ்வொருவரும் இருப்பதன் மூலம் நல்ல உடல் நலனைப் பேண முடியும் எனக் கோட்பாடுகளாக வகுத்துக் கூறினார். இந்த ஆறு அடிப்படைகளையும் பின்னர் ஒரு சில மாற்ற திருத்தங்களுடன் விரிவாக்கி இப்னு பத்லான் எனும் மருத்துவர் தரப்படுத்தம் செய்தார். இக்கோட்பாடுகள் இன்றும் நல்ல உடல் நலத்துக்குரியவைகளாக மருத்துவ உலகால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.