பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

எகிப்து நாட்டிலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றிய யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடுகளை அக்காலத்தில் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அக்கோட்பாடுகளின் நுணுக்கங்களை நன்றாக உணர்ந்து தெளிந்ததோடு,அதன் அடிப்படையில் வடிவ கணிதத்தை இன்றைய நவீன முறையில் வகுத்தளித்த பெருமைக்குரிய மேதை உமர்கையாம் எனும் சூஃபிக் கவிஞராவார். மற்றொரு வடிவ கணித மேதையான நஸீர் — அல்—தீன் அல்—குளி என்பவர் யூக்ளிடின் கணிதவியல் அடிப்படைக் கோட்பாடுகள் (Elements) என்ற நூலுக்கு விரிவான தெளிவுரை எழுதியுள்ளார்; இவ்விளக்கவுரை வெளிவந்த பின்பே யூக்ளிடின் கணிதவியலில் பெற்றிருந்த அறிவு நுட்பத்தையும் திறனையும் உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது அதன் அடிப்படையில் கணிதத்தின் பல்வேறு பிரிவுகள் கிளைத்துச் செழித்து வளரலாயின.

கருவுக்கு உரு தந்த மாண்பு

உலகெங்கும் அறிவியலின் பல்வேறு துறைகள் ஏதேனும் ஒரு வடிவில் முளைவிட்டிருந்தபோதிலும், பெருமானாரின் பொருண்மொழிக்கேற்ப அறிவு வேட்கை மிக்கவர்களாக — அறிவியல் உணர்வாளர்களாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்களல்லவா. எங்கெல்லாம் அறிவியலுக்கான ஆய்வு முயற்சிகள் எழுந்தனவோ அவற்றையெல்லாம் அறிந்து வந்தார்கள். தாங்கள் கற்றுவந்த அறிவியல் கருக்களுக்கு முழுமையான உருவை வழங்கினார்கள். இந்த வகையில் கணிதவியலைப் பொருத்தவரையில் பாபிலோனியர்களிடமிருந்தும் யூக்ளிட் போன்ற கிரேக்கக் கணிதவியல் மேதைகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் கற்க கணிதவியல் கண்டுபிடிப்புகளை அடியொற்றி எண் மான முறைகளை அரபு நாட்டுக் கணிதவியல் அறிஞர்கள் வகுத்தளிக்கலாயினர். இன்று உலகெங்கும்