பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

அண்மையில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நானும் என் துணைவியாரும் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள பால்டிமோரில் தங்கியிருந்தோம். அப்போது எனது இனிய நண்பரும் கணிப்பொறி விஞ்ஞானியும் 'தி ஹன்ரட்' (The 100) நூலின் ஆசிரியருமான டாக்டர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவரோடு நான் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தேன். அப்போது அவர் துணைவியாரும் உடன் இருந்தார்.

அவரது ‘தி ஹன்ரட்’ நூலில் தம் செல்வாக்கால் உலகத்தின் வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்த நூறு உலகப் பெரியார்களில் முதன்மை இடம் பெற்றிருந்த பெருமானார் (சல்) அவர்களைப் பற்றி எங்கள் விவாதம் திரும்பியது. அவர் தம் பேச்சினிடையே ஒரு கருத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினார். ‘உலகச் சமயத் தலைவர்கள் எல்லோருமே அக வளர்ச்சி பற்றியே அதிகம் பேசியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திய நபிகள் நாயகம் (சல்) மட்டுமே அகத்தையும் புறத்தையும் பற்றி ஒரு சேர அதிகம் போதித்தவர் அதிலும் அவரது சிந்தனையும் செயலும் அறிவியல் போக்கிலானது என்பதை ஆழ்ந்து பார்த்தால் நன்கு புரியும். திருமறையும் அறிவியல் உணர்வையே அதிகம் ஊட்டுவதாக உள்ளது. இதனால்தானோ என்னவோ பெருமானார் முதற்கொண்டு ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் முயன்று உழைத்து, இன்றைய அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் அடிப்படைகளையும் அழுத்தமாக அமைத்துச் சென்றுள்ளார்கள். இந்த வரலாற்றை சரிவர