பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

நவரத்தினங்கள், உலோகங்கள் ஆகியவற்றின் எடைகளைக் கூடுமானவரை சரியாகக் கணித்தவர் அல்-பிரூனியே ஆவார்.

அல்- பிரூனியின் எடை அளவுப்படி தங்கத்தின் அடர்த்தி 19.0 ஆகும். அதன் இன்றைய துல்லியமான அளவு 19 3 ஆகும். அவர் இரும்பின் அடர்த்தியை 7.92 என்று அளவிட்டார். அதன் இன்றைய துல்லிய அளவு 7.9 ஆகும். அவர் அளவிட்டுக் கூறிய நீலக்கல் அடர்த்தி 3.91 அதன் இன்றைய சரியான அளவு 3.90 ஆகும். இவ்வாறே இவர் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு கண்டறிந்த உலோகங்கள், வைரங்கள் ஆகியவற்றின் எடை அளவு மிக மிகக் குறைந்த அளவே வித்தியாசப்படுகிறது. சிலவற்றின் அளவு சரியாகவே உள்ளது வியப்பாகவுள்ளது.

உலக மருந்து மூலிகைக் களஞ்சியம்

இப்னு சினாவைப் போன்று அல் பிரூனி மருத்துவரல்லர் எனினும் அவரது புகழ்பெற்ற மருந்தியல் நூலான “கிதாப் அல் சாய்தானா” மருந்தாக்கக் கலை நூலாக அமைந்துள்ளதேயன்றி நோய்களின் தோற்றம் பற்றியோ அல்லது அவற்றைத் தீர்க்கும் வழிவகை பற்றியோ கூறவில்லை. அஃது மருந்துகளின் குணப்படுத்தும் தன்மைகளை விளக்கிக் கூறும் நூலாகும்.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட இம்மருந்தியல் நூல் உலகெங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய சுமார் முப்பதினாயிரம் மருத்துவக் குணமுள்ள மூலிகைகளின் பட்டியலையும் அம்மூலிகைகளுக்கான அரபி, பெர்சியப் பெயர்களையும் கொண்டதாகும். இவ்வாறு மூலிகைகளின் மருத்துவக்குணப் பண்புகளையும் அவற்றின் பன்மொழிப் பெயர்களையும் விவரிக்கும் விவரத்தொகுப்பு நூலாகவே அஃது அமைந்துள்ளது.