பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிலையுடைய நாடாக மாறியது.

மேலும், தாவரங்களில் சில மருத்துவத்திற்குப் பயன் படக்கூடிய மருந்துக் குணமுடையவைகளாக இருப்பதை அன்றைய முஸ்லிம்கள் ஆராய்ச்சிகள் மூலம் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை முன்பே நாம் கண்டோம். இம் மருந்துச் செடிகள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொண்டு பலவித நோய்கள் போக்கப்பட்டன என்பதையும் நாம் முன்பே அறிவோம். செடி கொடிகளை எவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தவர்களிலேயே தலையாயவராகக் கருதப்படுவர் அஹமத் இப்னு அல் பைத்தார் என்பவராவார். முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர் தாவரவியல் ஆராய்ச்சிக்காக ஆசியா, ஆஃப்ரிக்கா நாடுகள் பலவற்றின் விரிவாகப் பயணம் செய்து ஆய்வு நடத்தியவராவார். இவர் தம் தாவரவியல் ஆராய்ச்சிகளை ஆய்வுக் கட்டுரைகளாக அவ்வப்போது எழுதி வந்தார். அவைகள் அனைத்தையும் தொகுத்து “அல் முப்ரதா” எனும் பெயரில் பெரும் நூலாக வெளியாக்கினார். இந்நூலில் சுமார் 1,400 மூலிகைகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவக் குணம் பற்றியும் ஆராய்ச்சிகளையும், அவற்றை மருத்துவத் துறையில் பயன்படுத்துவதால் குணமாகும் நோய்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட அரிய தொகுப்பாக அமைந்துள்ளது.

இவரைப் பொருத்தவரை மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. இவர்தான் முதன் முதலில் மிருகங்களிலிருந்தும் தாதுப்பொருட்களிலிருந்தும் மருந்து தயாரிக்கும் முறையை ஆய்ந்து கண்டவர். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் பிற்காலத்தில் நவீன மருந்தியல் துறையின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் ஆக்கம் தருவாக அமைந்தன,