பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பட்டிருந்தது. இதே போன்ற மற்றொரு காகிதத் தொழிற்சாலை சிரியாவில் இருந்தது. திரிப்போலி நகரக் காகித தொழிற்சாலையில் மிக உயர் தரமான காகிதம் தயாரிக்கப்பட்டது. எகிப்தில் காகிதத் தொழிற்சாலை கி.பி. 900 ஆண்டில் நிறுவப்பட்டது. கி பி , பத்தாம் நூற்றாண்டு வாக்கில் காகிதம் செய்யும் தொழில் நுட்பம் இஸ்லாமிய நாடுகள் எங்கணும் பரவி, அங்கெல்லாம் காகிதத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் உருவாயின. இதனால், எழுத்துக்கலையும் நூல் உருவாக்கமும் துரிதமடைந்தன. கி.பி 837 இல் புதுவிதக் காகிதத்தில் ‘கலீல் அல் ஹதீத்’ எனும் நூலை அபூ உபைத் என்பவர் எழுதி வெளியிட்டார் இந்நூல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஹாலந்தில் உள்ள லெய்டன் பல்கலைக் கழக நூலகக் காப்பகத்தில் இந்நூல் இன்றும் உள்ளது.

அரபுக் காகிதக் கலை ஸ்பெய்ன் வாயிலாக ஐரோப்பாவுக்கு

அரபு நாடெங்கும் நன்கு பரவி காலூன்றிய காகிதக்கலை கி.பி 1250 இல் மொரோக்கோவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில் முறை ஸ்பெயின் நாட்டிற்குப் பரவியது. பிறகு அங்கிருந்து எளிதாக ஐரோப்பியர் முஸ்லிம்களிடமிருந்து கற்றனர். அதன் பின்னரே காகிதம் தயாரிக்கும் கலையும் அதன் பயன்பாடும் உலகெங்கும் பரவிநிலை பெறலாயிற்று.

காகிதம் தயாரிப்புக் கலை சீனாவில் பிறந்ததெனினும் அஃது செப்பமான முறையில் உருவாகி வளமாக வளர வழி வகுத்த பெருமை அரேபிய முஸ்லிம் ஆய்வாளர்களையே சாரும். குறைந்த செலவில் சிறந்த காகிதங்களைப் பெருமளவில் உருவாக்கும் தொழில் நுட்பத் திறனை உருவாக்கி உலகுக்கு வழங்கியவர்கள் முஸ்லிம்களே என்பது வரலாற்று உண்மையாகும்.