பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 அண்ணல் அநுமன்

பெரிய வாயினையுடைய காட்டு யானைகள் இவர்களைக் கண்டு தம் கன்றுகளைக் கண்டாற்போன்ற அன்புடையனவாய் உள்ளன. சிங்கங்களும் வேங்கை வரிப் புலிகளும் அவை போன்ற கொடிய விலங்குகளும் தம் கொடுமையை மறந்து காதல் கூர ஆசையுடன் நிற்க, பேய்களும் இவர்களை நன்கு மதித்து மனம் இளகுகின்றன. இவர்களைக் கண்டு எந்தக் கொடிய பிராணிகளும் சினம் கொள்ளுவதில்லை. (12)

இவர்கள் வழி நடத்தலால் இவர்கள் திருமேனியில் வெம்மை முதலியன தோன்றாதிருக்கும்பொருட்டு, மயில் முதலான பறவைகள் எல்லாம் மனம் இரங்கி, இவர்கட்கு மேலாகப் பெரிய சிறகுகளாகிய பந்தரைப் பரப்பி, மதில்போலச் சுற்றிலும் வளைத்துக்கொண்டு இவர்களுடன் வருகின்றன. வானத்திலுள்ள முகிற்கூட்டங்கள் எல்லா விடத்தும் நீர்த்துளிகளைச் சிந்திக்கொண்டு இவர்களைத் தொடர்ந்து வருகின்றன. (13)

இவர்கள் நடையாடும்போது இவர்தம் திருவடிகள் பட்டமாத்திரத்தில் சுடுகின்ற கற்களும் மலர்போல் குளிர்ந்து மென்மையாகின்றன. இவர்தம் திருமேனியைக் கண்டபோதே மரம் முதலிய அஃறிணைப் பொருள்களும் வணங்கி இவர்தம் கடவுள் தன்மையைப் புலப்படுத்துகின்றன. (14)

பிறவித் துன்பங்களைப் போக்கி அத்துன்பங்கட்குக் காரணமான அவிச்சையாலுண்டான தொல்வினைகளை ஒழித்து, யமலோகத்துக்குச் செல்லாமல் மீளா உலகத்தில் உய்க்கின்ற தேவாதி தேவனான திருமால்தானோ இவர்கள்? இவர்களைக் கண்டமாத்திரத்தில் என் எலும்பும் கரைகின்றதே. அளவில்லாத பக்தியும் மேன்மேலும் பெருகுகின்றது. இவர்கள் திறத்தில் உண்டான அன்புக்கு எல்லையே இல்லை. இவற்றிற்கெல்லாம் காரணம் யாதோ? அறியமாட்டாத நிலையில் இருக்கின்றேன். (15)

இவ்வாறு சிந்தித்தவண்ணம் தான் இருக்கும் இடத்துக்குத் தசரத குமாரர்கள் வரும்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/49&oldid=1360584" இலிருந்து மீள்விக்கப்பட்டது