பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனைச் செம்மல் 61

தலைகளைச் சிதற அடித்துப் பூங்கொடி போன்ற பிராட்டியைச் சிறைமீட்டு விரைவில் மீண்டு செல்வேன்' என எண்ணுகின்றான்.

"சக்கரவர்த்தித் திருமகனுடைய மனைவியாகிய பிராட்டியைச் சிறை வைத்திருப்பதைப் பார்த்துக்கொண்டே யாதொரு பரிகாரமும் செய்யமாட்டாமல் வாளா இருக்கும் தேவர்கள்" முதலானவர்கள் கண்காணும்படி, இவ்விராவண னுடைய கிரீடமணிந்த தலைகளைக் கொய்திலேனாயின் இனிமேல் செய்யக்கூடிய அடிமைத் தொழில் வேறு யாது உளது?

"பிராட்டியைத் தேடிக்கொண்டு வந்த ஒரு குரங்கு இவ்விராவணன் மருங்கு இருக்கும் ஆசை மகளிர் திகைத்து உள்ளே இரிந்து ஒடும்படி, இவனது கிரீடமணிந்த தலைகள் பல திசைகளிலும் உருண்டு ஓடச்செய்து வெற்றி கொண்டு ஆரவாரம் செய்கின்றது; அம்மம்மா! அது கொடிது! கொடிது!’ என்று உலகோர் உதிர்க்கும் புகழ்மொழி சிறிதோ? அதனைப் பெற முயல்வேன்.

"நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் (இராவணனை) கண்களால் நேரே காண்டற்காகவே உடம்பில் உயிர் வைத்துக்கொண்டிருந்து, இவனைக் கண்டு சில சொற்கள் கழறி மீளும்போது பழியாகிய பயனே எனக்கு வாய்க்கும்: அங்ங்னமன்றி இவனை எதிர்த்துப் போர் செய்வேனாயின் பெரும்பாலும் வெல்வேன்; அல்லது ஒருகால் தோற்றாலும் மரித்தாலும் புகழ் விளையுமேயன்றிப் பழி விளையாது.”

31. தேவர்களுள் சிலர் அடிமை செய்வோராவர். அவர்களைத் தவிர இராமன் கை ஓங்கும்போது பூமாரி பொழிவதற்கும் இராவணன் கை ஒய்கும்போது ஒடி மறைவதற்கும் தேவர்கள் உளர். இந்நிலையினை எதிர்பார்த்தோ கண்டோ தேவர் அனையர் கயவர் (குறள் 1073) என்று கயவர்க்குத் தேவர்களை உவமையாக்கினார் போலும் வள்ளுவப் பெருந்தகை !

32. சுந்தர. பிணிவீட்டு - 55 - 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/62&oldid=1360601" இலிருந்து மீள்விக்கப்பட்டது