பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. அஞ்சா நெஞ்சன்

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்." (774)"

வீரன் ஒருவன் தான் கையில் ஏந்திய வேலைத் தன்னை எதிர்த்து வந்த யானையின்மீது எறிந்து அதன் உயிரைப் போக்கிவிடுகின்றான். அவன் வேறு வேலைத் தேடுகின்ற நிலையில் தன் மார்பில் தைத்திருந்த பகைவரின் வேலைக் கண்டு, அதனைப் பறித்து மகிழ்கின்றான். அஞ்சா நெஞ்சுடைய வீரன் ஒருவனைக் காட்டும் வள்ளுவரின் சொல்லோவியம் இது. இத்தகைய அஞ்சா நெஞ்சத்தைத் தன்னகத்தே கொண்டு திகழ்வதற்கு இராமகாதையில் வரும் அஞ்சனை வயிற்றில் வந்துதித்த ஆஞ்சநேயனை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். கிட்கிந்தா காண்டத்தில் இவன் வீரத்தைப் புலப்படுத்துவனவாகச் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் காணமுடியவில்லை. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம்.

(1) வாலிக்கு அஞ்சி, அவன் மதங்க முனிவரின் சாபத்தால் ஏகுதற்கு முடியாத ருசியமுக பர்வதத்தில் வாழும் வானரக் கூட்டத்தில் முக்கியமானவனாக விளங்குபவன், இவன். முனிவரின் சாபத்தால் தன் பலம் தெரியாத நிலையில் சுக்கிரீவனுக்காக வாலியுடன் போரிடுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதலாம்.

(2) உன்னை எதிர்த்துப் போரிடுபவனின் பலத்தில் பாதி உன்னுடன் சேர்ந்துவிடும் என்று வாலி வரம் பெற்றுள்ளபடி யால் மதிநலம் வாய்த்த மாருதி வாலியுடன் மோதக் கனவிலும் கருதவில்லை என்றும் கொள்ளலாம்.

1. திருக்குறள் - படைச்செருக்கு - 7