அண்ணாமலை என்னும் 8
அவர் மிகச் சிறப்பான சங்கீத நாவலைப் படைக்க முடிந்ததற்கு முக்கியக் காரணம் அவரே ஒரு சங்கீத வித்வான் என்பது. சிறந்த வயலின் கலைஞர் அவர். கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் சீடர். நீலமணி வயலின் கச்சேரிகள் சிலவும் நிகழ்த்தியிருக்கிறார்.
அகில இந்திய வானொலியோடு அவருக்கு நிறைய நட்புறவு உண்டு. அவரது பல படைப்புகள் வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன. ‘பாப்பாவுக்கு ஒரு கதை’ என நிறையக் கதைகளை வானொலி மூலம் சொன்னார். நீலமணி எழுதிய ‘கவிமணியின் கதை’ நூல், தமிழக அரசின் பரிசு பெற்றது. இதே நூல் 13 வாரங்கள் சென்னை வானொலியில் ஒலிபரப்பாயிற்று.
25 புத்தகங்களுக்கு மேல் தமிழில் எழுதியவர். சுருதி சுத்தமாக எழுதப்பட்ட எண்ணற்ற சங்கீத விமர்சனங்களின் ஆசிரியர். சங்கீத விமர்சனங்கள் எழுதும்போது, வார்த்தை ஜாலத்தால் படிப்பவர்களை பிரமிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படமாட்டார். இசைக் கலைஞரின் திறமைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றே கருதுவார். நடுநிலையோடு இசை விமர்சனம் எழுத வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட உழைப்பு வியக்க வைப்பது.