பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அண்ணாவின் ஆறு கதைகள்


கலியாணம் செய்து கொள்ளும்படி வீட்டிலே வற்புறுத்தினார்கள், அவளோ, அது முடியாது, நீங்களாகப் பார்த்து யாரை நான் கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பாடு செய்யுங்கள், நானாகத் தேடிக்கொள்வது முடியாது, முறையாகாது, எனக்குத் தெரியாது என்று சொன்னாள்”

“அடடே! இது அதிசயமாகத்தான் இருக்கிறதடி. என்ன என்ன இன்னொரு தடவை சொல்லு”

"உனக்கு யார் மீது இஷ்டமோ அவனைக் கலியாணம் செய்துகொள் என்று வீட்டிலே வற்புறுத்தினார்கள். அவள் நான் யாரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று நீங்களே ஏற்பாடு செய்யுங்கள். நானாக வரனைத் தேடிக்கொள்ள முடியாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டாள். வீட்டிலே வற்புறுத்த, அதிசயம் ஒரேயடியாகக், கூனானாலும், குருடனானாலும், முடவனானாலும், முட்டாளானாலும், நீங்கள் பார்த்து யாரைக் கலியாணம் செய்துகொள்ளச் சொல்கிறீர்களோ, அவனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.”

‘ஏண்டி! அவளுக்கென்ன பைத்தியமா?’

“அவளுக்குப் பைத்தியமில்லை, அவளுடைய தகப்பனாருக்குப் பைத்யம்! அந்தப் பைத்தியக்கார அரசர், சாவதற்கு முன்பு, மந்திரி சேனாதிபதி பொக்கிஷதார் ஆகிய மூவரையும் கூப்பிட்டு, ஒரு சாசனம் கொடுத்தார். அதிலே, என் மகள், நீங்கள் தெரிந்தெடுக்கும் ஒருவனைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், என்பது என் விருப்பம். அப்படி அவள் நடந்துகொண்டால் தான் இந்த மண்டலத்துக்கு அவள் இராணியாக வேண்டும். இதற்கு மாறாக, அவள் இஷ்டப்படி யாரையேனும், அவள் கலியாணம் செய்துகொள்வதானால் இந்த இராஜ்யத்தை அவள் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடவேண்டும். நீங்கள் வேறு ஒருவரையோ, உங்களில் ஓருவரையோ ராஜ்யாதிகாரியாக்கிக் கொள்ளலாம் என்று நாம் உத்தரவிடுகிறோம் –—என்று குறித்திருந்தார்.”