பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

11


“சரியான பைத்யமடி; அந்த அரசன்”

“இல்லை, அவனும் ஒரு காரியப் பைத்யம்தான் மந்திரி, சேதினாபதி, பொக்கிஷதார், ஆகிய மூவரும், அயோக்யர்கள் என்பது, அரசனுக்குத் தெரியும். தனக்குப் பிறகு, தன் ஒரே மகள், அதிசயம், இந்த அயோக்யர்களின் சதியினால் சங்கடப்படவேண்டிவரும் என்று அஞ்சினான் அதிசயத்துக்கு யார் புருஷனாக வருகிறானோ, அவனைப்பற்றி அவதூறுகள் கிளப்பி, மக்களைத் தூண்டி விட்டுத் தொல்லை விளைவிப்பார்கள் என்று பயந்த மன்னன், அதிசயத்துக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே தந்துவிட்டால், பிறகு, அவர்களாகப் பார்த்து யாரை அதிசயத்துக்குப் புருஷனாக்குகிறார்களோ, அதே ஆள்மீது அவதூறு கிளப்பினால் ஜனங்கள், அந்த மூவரையே குறை கூறுவார்களே தவிர அதிசயத்தின்மீது ஆத்திரப்பட மாட்டார்கள் என்று யோசனை செய்து தான் மன்னன், சாசனம் எழுதினான்.”

“அது சரி! ஆனால், அதிசயம், தானாக ஒரு புருஷனைத் தெரிந்தெடுத்துக் கொள்ளவும் உரிமை இருந்ததே சாசனப்படி!”

“இருந்தது, ஆனால் நிபந்தனை இருந்ததே. தனக்கு இஷ்டமானவனைக் கலியாணம் செய்து கொள்வதனால், இராஜ்யத்தை விட்டுவிட வேண்டும் என்றல்லவா சாசனம் இருந்தது. அதனுடைய கருத்து என்னவென்றால், அப்படி அதிசயத்துக்கு யார் மீதாவது உண்மையான காதல் ஏற்படுமானால், அது யாராவது ஒரு வீரமுள்ள அரச குமாரனாகத் தானே இருப்பான், அவனுக்காக அதிசயம் ஒரு இராஜ்யத்தையே தியாகம் செய்தால் நஷ்டமில்லை! அவன் வீரத்தால், அவள் இழந்த இராஜ்யமும் மீண்டும் கிடைத்து விடும் என்று அரசன் நினைத்தான்.”

“அது எப்படியடி அவன் அப்படி நினைக்கலாம்? அந்த அதிசயம் என்ன, அரசகுமாரனையே தானா காதலிப்பாள்? அரசகுமாரி அரச குமாரனைத்தான் காதலிக்க