பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

15


அதிசயத்தின் பாதுகாப்புக்காகப் பூங்காவனத்திலே உலவி வந்த காவலாளி விட்டபாணம்.“

“அவன் என்ன, காவலாளி கண்டு திருடன் என்று நினைக்கும்படி அவ்வளவு கேவலமான உருவமுடையவனா?”

“நான் தான் முதலிலேயே சொன்னேனே, சுந்தரமான புருஷன் என்று, அங்கே அவன் மாறுவேடத்திலே வந்திருந்தான்”

“அப்படிச் சொல்லு.”

“மான் மீது பாணம் பாய்ந்தது. அரசகுமாரி அழுதாள். தான் விட்ட கணை தவறி மான் மீது பட்டது தெரிந்தால் உயிருக்கு உலை வருமென்று பயந்து காவலாளி ஓடிவிட்டான். மாறுவேடத்திலிருந்த மன்னன் மகன் அவளருகே சென்று தேறுதல் கூறிப், பாணத்தை மெள்ள எடுத்து விட்டுப் பச்சிலை பூசி,மானுக்குச் சிகிச்சை செய்து கொண்டே, தேனைக் கலந்து பேசத் தொடங்கினான்.”

“போதுமய்யா உமது பேச்சு! என் நந்தவனத்திலே நுழைந்ததுமன்றி. என் மானையுங் கொல்லப் பார்த்தீர்” என்று கோபத்தோடு பேசினாள் அதிசயம்.

“கணை விட்டது நான் அல்ல கையிலே வில் இல்லை, முதுகிலே அம்புறாத் துணியுமில்லை, பாருங்கள்” என்று விநாயகப் பதில் கூறினான் அரச குமாரன். அவள் பார்த்தாள்! வில்லும் அம்பும் இல்லை, ஆனால் அவளை வெல்லும் புன்னகையும் கண்களிலே காதல் ஒளியும் கண்டாள் மனதிலோர்வித இன்பம் புகக் கண்டாள், மானைத் தடவியபடி மௌனமாகக் குனிந்து நின்றாள். மானைத் தடவிக் கொடுத்த இருவரின் கரங்களும் சந்தித்தன, இருவரின் விழிகளும் உடனே சந்தித்தன. ஒருவரின் விழி மற்றவரின் இருதயத்தைத் தடவிப் பார்க்கத் தொடங்கின. காதல் பிறந்தது. அவளுக்குக் கவலையும் பிறந்தது. இளைஞனை மணந்தால் ராஜ்யத்தை இழக்க வேண்டும் என்ற கவலை இல்லாமற்போகுமா?