பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

19


ஆட்களை அழைத்து ஏதோ கொண்டுவரச் சொன்னான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மூன்று கழுதைகளைக் கொண்டுவந்து வேலையாட்கள் நிறுத்தினர். மூவருக்கும் அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மணவினைக்கு வந்திருந்தவர்களும், இதென்ன விந்தை என்று கூறினர். “அரசே! இந்தப் பரிசுப் பரிகளின் மீது இவர்களை ஏற்ற வேண்டியது தானே” என்று கேட்டான் இளவரசன், “ஆமாம்!” என்றான் தோழன். அரசகுமாரி சிரித்தாள், மக்கள் ஆத்திரமடைந்தனர், இதற்குள் ஊருக்குள்ளே, சிறு சிறு பிரிவாக வந்து சேர்ந்த இளவரசனின் படை, ஆத்திரமடைந்த மக்களை அடக்கத் தொடங்கிற்று. கழுதை மேல் பலாத்காரமாக மூவரையும் தூக்கிவைத்துக் கட்டச் செய்தான் இளவரசன். கலியாணப் பந்தலில் ஒரே குழப்பமாகிவிட்டது. சன்மானம் கிடைக்காமற் போகிறதே என்று புரோகிதர் புலம்பினார். உடனே மாறுவேடத்தைக் கலைத்துவிட்டு, நின்றான் இளவரசன். அவன் மீது சாய்ந்து கொண்டு புன்னகை புரிந்தாள் அதிசயம். பிறகு மக்களிடம், சாசனத்தின் முழு விவரத்தையும், சதிபுரிந்த மூவர் செயலையும் கூறினாள். மக்களின் கோபம் சதிகாரர் மீதுபாய்ந்தது. ஒருபுறம் கலியாண ஊர்வலம் நடந்து கொண்டிருக்கையில் மற்றோர்புறம் கழுதைமீது ஏறிய கனவான்களின் ஊர்வலம் நடந்தது. இராஜ ஊர்வலத்திலே கூட்டம் குறைவுதான்! இளவரசன் தனக்கு உதவிபுரிந்த நடிப்பு மாப்பிள்ளைக்கு நல்ல பரிசுகள் தந்தான். அதிசயராணியும் அவளை மணம் புரிந்துகொண்ட அழகேச மன்னனும் அனேக ஆண்டுகள் நீதிநெறி வழுவாமல் அரசாண்டு வந்தனர். அவ்வளவுதான் கதை. ஆனால் அதிலே உள்ள காதலைப் பற்றிய வர்ணனைகளைப் படித்தால் பெண்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.”

“அதென்னடி அம்மா, பெண்களுக்குத்தானா அவ்வளவு சபலபுத்தி. அவர்கள் தானா காதல் விஷயமாகப் படித்தால் பைத்தியமாவார்கள். ஆண்கள் படித்தால் மட்டும் பைத்தியம் பிடிக்காதா ?