பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அண்ணாவின் ஆறு கதைகள்



“ஆண்களுக்குப் பரிந்து பேசுவதாகவா நீ நினைத்துக் கொண்டாய்? போடி அசடே! பெண்களுக்குக் காதலைப் படித்தால் பித்தம் பிறக்கும். ஆண்கள் அதுபோலப் படிக்கவே தேவையில்லை அவர்களுக்குத் தான் பெண்ணைக் கண்டாலே பித்தம் தானாகப் பிறந்து விடுகிறதே”

“அப்படிச் சொல்லு! அற்புதமான கதைதாண்டி, நான் கூடப் படிக்க வேண்டும். மனதுக்கு இசைந்தவன் மாடு மேய்ப்பவனாக இருந்தாலும் அவனோடு வாழ்வதுதான் இன்பம்”

அமிர்தம், அன்று சொன்ன கதை. கிரேக்க ஆசிரியர் எவரும் எழுதியதல்ல! யோகானந்தரின் மொழி பெயர்ப்புமல்ல. அவளுடைய கற்பனை! இந்த அற்புதமான கதையைக் கேட்ட போது முளைத்தது கிருஷ்ணனுக்கு பித்தம், கிருஷ்ணன் கதை பேசிக்கொண்டிருந்த கன்னியர் போலவே, கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்தவன்தான். கடலோரத்திலே வழக்கப்படி மாலை வேளையிலே உலவச்சென்று இந்த உல்லாசிகளின் கதையைக் கேட்டான். கதையின் போக்கை விட, லீலாவின் காதல் விளக்கம் அவனுக்கு மிக மிகப் பிடித்தது. மந்தையிலே மாடு மேய்ப்பவனானாலும்! ஆஹா! எவ்வளவு உயர்தரமான உத்தமமான, தெய்வீகக் காதல் இது என்று எண்ணி எண்ணிப் பூரித்தான். மாடு மேய்த்துத்தான் இப்படிப்பட்ட மங்கையைப் பெற முடியும் என்றாலும் சரி, இவளுடைய காதலையே பெறுவது என்று தீர்மானித்தான் அவனுக்கு அடுத்தநாள் முதல், ஸ்நோவும், பவுடரும், செண்டும், சிகரெட்டும், தையற் கூலியும், வாஷிங் கம்பெனிப் பாக்கியும், செலூன் செலவும் அதிகரித்து விட்டது காதல், காதல், காதல் பிறந்திடில் காசுபோதல் என்றாகி விட்டது. கிருஷ்ணன் F. A. வின் நிலைமை.

பர்மாவிலே வியாபாரம் செய்யச் சென்ற அவன் தகப்பனாரின் கதியோ, படுமோசமாகிவிட்டது. பெருத்த நஷ்டம், ஊர் திரும்பினார், பட்டை விபூதியும், பழிதீர்த்த