பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

21


ஈசுவரர் கோயில் படிக்கட்டுமே கதி என்று கிருஷ்ணனின் கல்லூரிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அந்தப் படிப்பு இடையிலே பட்டுப்போனதே யொழிய காதல் படிப்பு துளிர்விட்டபடியே இருந்தது. காதற்கதைகளை ஆசிரியராகக் கொண்டான். தோட்டக்காரியை மணந்துகொண்ட மன்னன் கதை, குதிரைக்காரனை மணந்துகொண்ட ராஜகுமாரி சரித்திரம் முதலியவைகளைப் படித்தான் பரிட்சைக்குத் தயாராக! ஓரு கதாசிரியர் எழுதினார். “பார்த்தவுடனே ஒரு மங்கையின் மனதிலே உன்னைப் பற்றி மதிப்புப் பிறக்க வேண்டுமானால் உடை, உடை, உடை அதுதான் முக்கியம். தம்பி நீ தரித்திரத்திலே புரண்டாலும், எந்த மங்கையிடம் வெற்றி பெற விரும்புகிறாயோ.அவள் காணும்போது, உன் உடை உயர்தரமானதாக நாகரீகமாக. கூடுமானால் ஆடம்பரமாக இருக்கவேண்டும்” என்று புத்தி கூறினார். ஏழ்மைக்கும் விலை உயர்ந்த உடைக்கும் பொருத்தமிராதே, என்பது பற்றிய கவலையை அந்த ஆசிரியர், வாசகருக்கே விட்டுவிட்டார். ஏழையாக இருந்தாலும் ஆடம்பர உடையைப்பெறும் விதம் என்ன என்பது பற்றியும் அவர் எழுதவில்லை! வேறோர் ஆசிரியர், “படாடோபமாக உடை அணிந்தவர்களைக் கண்டாலே பாவையர் விரும்ப மாட்டார்கள்” என்று எழுதி விட்டார்”. மற்றொருவர், ‘பணிவு! பணிவு! அந்தப் பூஷணம் உங்களிடம் உண்டா என்றுதான் பெண் இனம் கேட்கிறது. அவர்களைக் காணும்போதே ஒரு பணிவு, ஒப்புக்காவது, பாவனைக்காவது, உங்களுக்கு இருக்க வேண்டும். பேச்சிலே, செயலிலே, நடை உடை பாவனையிலே பணிவு காட்டினால், இணங்காத பெண் இகபரம் இரண்டிலுமில்லை” என்று தீட்டிவிட்டார். "காதலிலே வெற்றிதானே வேண்டும்! இதோ அதற்கு மார்க்கம்” என்ற பீடிகையுடன் துவக்கினார் இன்னுமொருவர், கிருஷ்ணன் அதைப் படித்து மனதைக் குழப்பிக்கொண்டான். எருமை மிதித்த சேறுபோலாகிவிட்டது அவன் மனம். “பகலவனைக்கண்டு பங்கஜம் மலரும், அவளை மகிழ்விக்க அருகே இரு. எப்போதும் இரு. பிறகு அவள் உனக்குச் சொந்தம், இது அயன் விதி”