பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

23


மயக்கி மகிழ்வித்து, மகிழ்ந்து, நம்மையும் மகிழ்விக்கிறானன்றோ ! குழல் இல்லையேல், கோபிகா ஸ்திரீகளுடன் கண்ணனின் காதற்களியாட்டங்கள் இல்லை. அந்த ஆட்டம் இல்லையேல், கண்ணன் இல்லை, கண்ணன் இல்லையேல் கீதை யில்லை, கீதையில்லையேல் நமது மதம் இல்லை, நமது மதம் இல்லையேல், நாம் இல்லை!” என்று முடித்தார் அந்த மூதறிஞர். கிருஷ்ணன் செயலில் இறங்கினான், குழலை எடுத்தான், பலருடைய செவிகளுக்குக் குடச்சல் நோயைத் தந்தான். ஜெமீன்தார் வீட்டுப்பெண்ணை வீழ்த்த வேண்டுமென்ற விரதத்தைக் கொண்டான், சரிகம பதனியை ஓய்வின்றி ஊதினான், வர்ணம், கீர்த்தனம் எனும் கட்டங்களை விரைவாகத் தாண்டினான், நாதம் ஜிலு ஜிலுப்பாக இருக்கிறதென்பதற்காக கச்சேரி சான்சு வரத் தொடங்கிற்று. சில பஜனைக்கோயில்களில், போயிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய கடலை தேங்காய்மூடி கழுத்துப் பூச்சரம் ஆகியவற்றைத் தியாகம் செய்தான். குழலில் போதுமான பயிற்சி கிடைத்தது என்று தைரியம் பிறந்ததும் ஜெமீன் வீட்டு மந்தை மன்னனானான், மாடுகளை மயக்கப் பழக்கினான், மாதும் மயங்கினதாகத்தான் கருதினான்.

கிருஷ்ணனின் குழல் லீலாவுக்குக் களிப்பூட்டிற்று காதலை ஊட்டவில்லை, கல்லூரிப் படிப்பை முடித்தானதும், லீலா தனது காதல் நினைவுகளைத் தூக்கி எறிந்தாள். சாயம்போன சேலையைப் பழய பிரேமைக்காக எந்தப் பெண் அணிந்து கொள்வாள்.

இன்று கேட்போம், நாளை கேட்போம், என்று ஏங்கிக் கிடந்த கிருஷ்ணனிடம் ஒரு நாள், லீலா வலியவந்து பேசலானாள்.

“குழல் வாசிப்பு மிக அருமையாக இருக்கிறது” என்றாள் லீலா, உன் குரலின் இனிமையைவிடவா, என்று பேசவேண்டும் காதல் விளக்க நூலின் படி. ஆனால் அவன் எண்ணத்தை எடுத்துரைக்க நாவிற்கு துணிவில்லை.

“இது என்ன பிரமாதம்!” என்று கூறினான்.