பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளி திருமணம்

31


பார்த்தான். வள்ளி தெரிந்தாள். மெள்ளக் கால்மாட்டுப் பக்கமாக நின்று, சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே, கால் விரலை மிதித்தான். வள்ளிக்கு உடல் ஜில்லென்றாகிவிட்டது, பயத்தால். காலை இழுத்துக்கொண்டாள். அந்த வேகத்திலே வேலன் கீழே இடறினான். சத்தம் கேட்டுப் படுத்துக் கொண்டிருந்தவர்களிலே யாரோ விழித்துக் கொண்டு, என்ன சத்தம்? என்று கேட்க சமையற்கட்டுக்குள் சந்தடியின்றிச் சென்றுவிட்டான் மாப்பிள்ளை. வள்ளிக்கு அடக்க முடியாத சிரிப்பு! “எதுவோ பூனை வந்தது, துரத்தினேன்” என்று கூறிவிட்டாள். விழித்தவர் மீண்டும் குறட்டை விட்டனர். “இவ்வளவு ஆசை என் மீது வைத்திருப்பவன் எவளோ பணத்தோடு வரவே அவளைப் பந்தலிலே பத்துப்பேர் முன்னிலையில் தாலி கட்டி விட்டு, விடியற்காலை என் விரலை மிதித்து வாடி என்று அழைக்கின்றான். எவ்வளவு சூது, “அக்ரமம்” என்று வள்ளிக்குக் கோபம். வாயைத் திறக்க முடியுமா, பாபம்! காலையிலே கலியாணமானவன், இந்தக் கதியிலே காணப்பட்டால், கலியாணத்திற்கு வந்தவர்கள் கை கொட்டிச் சிரித்து, ஊர் கூட்டிச் சொல்லிவிட மாட்டார்களா! நம்மால் அவருக்கு ஏன் தொல்லை வரவேண்டும் என்று அம்மங்கையின் தூய உள்ளம் நினைத்தது. உள்ளே நுழைந்த மாப்பிள்ளையின் மனம் துடித்தது வெளியே வருவதும், தூங்குபவர் கைச்சத்தமோ, கால் சத்தமோ கேட்டால், உள்ளே போய்ப் பதுங்குவதுமாக இருந்தான். என்ன முட்டாள்தனமாக செய்துவிட்டோம் என்று துக்கித்தான். வள்ளி அதே நேரத்தில் தும்மினாள். அவள் - விழித்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும், பயம் போய்விட்டது. ‘அந்த எண்ணம்’ மேலிட்டது. “வள்ளி!” என்று மெள்ள அழைத்தான். அவளருகே சென்று. படுத்திருந்தவள் எழுந்து “ஏன்? யார்?” என்று கொஞ்சம் உரத்த குரலிலே கேட்டாள். “மெதுவாகப் பேசு வள்ளி! ஒன்றுமில்லை. ஒரு விஷயம். தனியே இப்படி வாயேன்.”

“ஊஹும். இதென்ன அக்ரமம்? நான் மாட்டேன்.”