பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அண்ணாவின் ஆறு கதைகள்



“பாட்டைப் பார்த்தியா, ரொம்ப ருசியா இருக்கிறதே” என்றனர் யாவரும்.

“ஆமாம். சீக்கிரம் வீடு போனால்தான் வீட்டிலே சாப்பாடு ருசியாக இருக்கும், எடுங்கள் குடத்தை போவோம் ! பாமா பேச்சைப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது” என்று அன்னம் கூறிட, எல்லோருமாகக் குடங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.

உள்ளபடியே பாமாவின் பேச்சை யார் பேச ஆரம்பித்தாலும், அன்னம் கூறியபடி பொழுது போவதே தெரியாது.

நடுத்தர உயரம்! கண் கவரும் சிவப்பு ! காதுவரை நீண்டு செவ்வரி படர்ந்த சிங்காரக்கண்கள்! கன்னங்கள், கண்ணாடி! புருவங்களோ, மதனன் வில்லே யென்னலாம்! கொவ்வை இதழ்! அக்கோமளவல்லிக்கு முத்துப்பற்கள்! அவை எப்போதோ சில சமயங்களே வெளியே தெரிந்து காண்போரை மயக்கிவிட்டு, மாயமாக மறைந்துவிடும்!

இன்பத்தின் உருவம் ! இயற்கையின் சித்திரம் ! ஆனந்த ஒளி! என்றெல்லாம் பாமாவைப் பற்றிப் பேசிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.

அந்த சிற்றூருக்கு, பாமாதான் தாஜ்மகால்.

அவர்கள் குடும்பத்தின் கோகினூர் பாமாவே. பாமாவிற்கு வயது 18 இருக்கும். தகப்பனார் பாமா சிறு பெண்ணாக இருக்கும் போதே இறந்து விட்டார். தாய் பாமாவைக் கண்டு கண்டு பூரித்து தன் வாழ்வைத் தள்ளி வந்தாள்.

பாமாவின் அழகு வளர்ந்துகொண்டு வந்தது போலவே, அறிவும் வளர்ந்துகொண்டே வந்தது. அறிவு என்றால், அல்லி அரசாணி மாலையும், நல்லதங்காள் புலம்பலும், அந்தகனை மணந்த அற்புத வள்ளியின் கதையும் படிப்பது என்றல்ல. பகுத்தறிவு!

பாவை பொன்போல இருந்தாள்! அவளுடைய அறிவு வைரம்போல் மின்னிக்கொண்டிருந்தது. தாய் அந்தக் காலத்து நடத்தை, பழங்காலப் பேச்சு பேசி வருவாள்.