பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாமா விஜயம்

45


“சிவ! சிவ! சம்போ, மகாதேவா! உனக்கு என்ன அபசாரம் பண்ணினேனோ, என் தலையிலே இப்படி இடி விழுந்ததே” என்று அழுதார்.

“சரி கேளும் மேலும் சில சேதியை; கமலாவும் சுப்பிரமணியமும் இன்றிரவே புறப்பட்டு சென்னை போகிறார்கள். அங்கேதான் குடியிருப்பார்கள். நானும் அடுத்தவாரம் அங்கே போகிறேன்” என்றாள் பாமா.

“ஏண்டி பாமா! இது என்னடி பெரிய வம்பாகிவிட்டது?” என்று கூறிக்கொண்டே, பாமாவின் தாயார், சாஸ்திரியாரை அறையை விட்டு வெளி ஏற்றினார். கமலாவை திரும்பிக்கூட பார்க்காது, அவர் வீடு சென்றார்.

அன்றிரவே கமலாவும் அவளுடைய காதற் கணவன் சுப்பிரமணியமும் சென்னை சென்றனர்.

பாமா புன்சிரிப்புடன், தாயை நோக்கினாள்.“ஏனம்மா! விதவைக்கு மணமுடித்து வைக்கிற திறமை எனக்கு இருக்கும்போது, என்னை ஒரு கிழவனுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தாயே” என்று கேலி செய்துவிட்டு “இதோ பாரம்மா! படத்தை. இவரைத்தான் நான் அடுத்த வாரம் மணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்று கூறிக் கொண்டே, ஒரு ‘போட்டோ’ வைக்காட்டினாள்.

பாமாவின் தாய் அதைப் பார்த்தாள். படம் ஒரு வசீகரமான இளைஞனுடையது! நாகரீகமான உடை! நல்ல தோற்றம்!

“யாரம்மா இது? என்ன ஜாதி”? என்றாள் தாயார்.

“இவர் தானம்மா எனக்குக் கணவராக வரப்போகிறார், ஜாதி, ஆண் ஜாதி தான். எனக்கு அவ்வளவு தான் தெரியும்” என்று கூறிக்கொண்டே தாயின் கன்னத்தை அன்போடு கிள்ளினாள்.