பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

“அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி ! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து கும்பிடு.

அன்னம், சின்னஞ் சிற்றிடையாள், சேல்விழியாள் சிவந்த மேனியாள், சிரிப்புக்காரி, உலகமே அறியாதவள் , தாயம்மாள், அன்னத்தைப் பெற்றவள். வயதானவள். உலகின் மாறுதலைக் கண்டவள், உத்தமர்கள் உலுத்தரானதையும் கண்டிருக்கிறாள்; ஓட்டாண்டிகள் குபேரரானதையும் கண்டாள். தனது ஒரே மகள் அன்னம் அழகுடனிருக்கிறது கண்டு பூரிப்பு, ஆனால் உலகமறியாமல், உண்பதும், உறங்குவதும், உடுப்பதும், ஊர்ப்பேச்சுப் பேசுவதும், பூத்தொடுப்பதும், புத்தகம் படிப்பதுமாகவே காலங்கழிக்கிறாளே என்ற கவலை. இதற்காகக் கவலை ஏன்? என்று கேட்கத்தான் உங்கள் மனம் தூண்டும். தாயம்மாளுக்கல்லவோ தெரியும், அந்தக் குடும்பத்தின் கஷ்டம். நிலத்தை உழுது நீர் பாய்ச்சியவனல்லவா, பயிர் வளருவது கண்டு பூரித்துக் கலை முளைப்பது கண்டு கவலைப்பட்டு, ஏரி வற்றுவது கண்டு வாடி, வானத்தை அண்ணாந்து பார்த்து. ‘மகமாயி! இன்னமும் மழை