பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அண்ணாவின் ஆறு கதைகள்



“போதாதோ புவனா! இன்னமுமா குழல் ஊத வேண்டும்! புவனா! வாடி, கிட்டே! வரமாட்டாயோ? சரி, போ,போ, நீ போய்விட்டால் என்ன? இதோ மாணிக்கத்தைக் கூப்பிட்டுக் கொள்கிறேன்” என்று கிருஷ்ணன் கூறிக்கொண்டே மாணிக்கத்தை நோக்கி நடந்தான். அதே சமயம், சற்றுத் தொலைவிலே, வேலியில் படர்ந்திருந்த கொடிகளுக்கிடையே எதையோ கண்டான், களிகொண்டான், மீண்டும் குழலை வாசிக்கத் தொடங்கினான். யாருக்காகக் குழலை வாசிக்க அவன் மனம் துடித்ததோ, அந்த லீலா வேலிக்கு அப்புறமிருந்து தன்னைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் கண்டுகொண்டான். அதனாலே ஏற்பட்ட மகிழ்ச்சியினால், அவன் மிக்க மதுரமாகக் குழலை வாசித்துக்கொண்டே, ஆனந்தத்திலே இலயித்துக் கண்களை மூடிக்கொண்டான். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து பார்க்க, லீலா இருந்த இடத்திலே ஓணான் உலவக் கண்டு, சோகமும், கோபமும் கொண்டு, வேலிக்கு அருகே சென்று பார்க்க, வேக வேகமாக லீலா போய்க்கொண்டிருக்கக் கண்டு, சலிப்படைந்து, கோமதியைக் கோலால் அடித்து, மீனாவின் முதுகிலே அறைந்து, சுந்தரி மீது கல்விட்டு எறிந்து, மரகதத்தின் காதைப் பிடித்துக் கரகரவென்றிழுத்து வந்து நிறுத்தி, ஊருக்குள் ஓட்டிக் கொண்டுபோய்ச் சேர்த்தான்!

ஆம்! கிருஷ்ணன், திரிபுரம் ஜெமீன் மந்தையிலே, வேலை பார்ப்பவன்! சுகுணாவும், சுந்தரியும், கோமளமும், கோமதியும், மந்தைச் சுந்தரிகளே! லீலா தவிர! லீலா, ஜெமீன்தாரர் வீட்டுப் பெண், மற்றவை, அவள் வீட்டு மாடுகள். கிருஷ்ணன், குழல் ஊதிக் குதூகலப்படுத்த எண்ணியது லீலாவை, நாலுகால் நளினிகளையல்ல!! ஆனால் அந்தப் பசுக்களின் இருதயம் வேறுவிதமாகவும், பாவையின் இருதயம் வேறுவிதமாகவும் அமைந்திருந்தது. ஜெமீன் மந்தைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் குழல் ஊதுவதிலே மகா சமர்த்தன் என்றும், அவனுடைய இனிய இசையிலே, இன்புற்று மந்தையே மகிழ்ச்சியிலே