பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அண்ணாவின் ஆறு கதைகள்


என்ன மாசு இருக்கிறது. தாயம்மாள் விபசாரி என்றால், அது. அவளுடைய வேதனைக்கு ஒரு அத்தாட்சி. அதே வேதனை அன்னத்துக்கு வரவிடாதபடி தடுக்க நீ அவளைக் கலியாணம் செய்து கொள்'” என்று அன்னத்தின் கண்கள் இளம் ஆடவரின் நெஞ்சுக்குக் கூறின. எனவே, சிலர் “ஆமாம், செய்துகொண்டால்தான் என்ன?” என்று பேசிடவும் தொடங்கினர். எந்த ஜாதியாக இருப்பினும் சரி, ஏதோ மாதம் இருபது ரூபாய் சம்பாதித்து. என் பெண்ணைக் காப்பாற்றுபவனாக இருந்தால் போதும்” என்று தாயம்மாள் கூறினாள். தரகர்கள் தம்மாலானவரை முயன்றனர். பெண் பார்க்கச் சிலர் வந்து போயினர் காரியம் முடியவில்லை. அந்தக் கவலைதான் தாயம்மாளுக்கு. அந்தச் சமயம் அவளை நாயகியாகக் கொண்டிருந்தவன் ஒரு கள்ளுக்கடை கண்டிராக்டர். எனவே, அவன் தாயம்மாள் அதிகக் கவலைப்பட்டால், ‘கொஞ்சம் போட்டுக் கொள்ளச்’ சொல்லுவான். தாயம்மாளுக்கு அந்தப் பழக்கமும் உண்டு .

அன்னத்தின் நெஞ்சம், அசையாமலில்லை. அடிக்கடி அவ்வீதி வழியிலே தன்னைக் காண்பதற்காகவே வரும் ஆறுமுகம் என்ற வாலிபன் மீது அவளுக்கு ஆவல்! அவர்கள் சந்திப்பு, நித்திய நிகழ்ச்சி, வீட்டிலே, உள்வாசலிலே, அன்னம் பூத்தொடுத்துக் கொண்டிருப்பாள், ஆறுமுகம், அந்த வீட்டுக்கு எதிரிலே இருந்த வெற்றிலைப் பாக்குக் கடைக்கு வருவான்; வெற்றிலை போட்டுக் கொண்டு நிற்பான். இருவருக்கும் சந்திப்பு! புன்னகை, இருவர் மணமும் மெள்ள மெள்ள ஒன்றாகிக்கொண்டு வந்தது. பேசவில்லை அவர்கள், பேசுவானேன்? அந்தப் பெரும் புலவர் கூறினது பொய்யா? “கண்ணொடு கண்ணினை நோக்கொக் கின்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில!!” தாயம்மாள் இரண்டோர் முறை இந்தக் காட்சியைக் கண்டதுமுண்டு. பச்சை சிரிப்பையும், பசப்பு மொழியையும் கண்டு ஏமாந்துதானே நாம் இந்தக் கதிக்கு வந்தோம். அன்னத்தை எவனாவது இதுபோல் கெடுத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கருதி, சில தடவைகளிலே கண்டித்தாள்.