பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அண்ணாவின் ஆறு கதைகள்


அவள் தென்படவில்லை – வேறு ஏதேதோ உருவங்கள் – தெளிவில்லை – ஆனால் பெண் உருவங்கள், புகைப்படலத்தால் மூடப்பட்ட உருவங்கள் தென்பட்டன. அவர்களெல்லாம் யார் ? வனஜாபோல இருக்கிறது! இல்லை, இல்லை, வாழை இலைத் தோட்டக்காரி முனி–இல்லையே–வளைந்தான் வீதி குப்பிபோல இருக்கிறதே–இப்படி எண்ணங்கள் அவர் மனதிலே. எதிரே நின்றவள் ஒருவள் தான் – அவர் கண்களுக்கு மட்டும் மாறி மாறித் தோன்றின – பல மாதரின் உருவங்கள் – அனைவரும், அவருடைய காமப் பசிக்கு விருந்தளித்தவர்கள் – அவரால் விபசாரியானவர்கள் அவரால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியவில்லை. “வழக்கு மறுநாள்” என்று சுருக்கமாகக் கூறி விட்டு மாளிகைக்குள் போய் விட்டார். அவள் வெற்றிப் புன்னகையுடன் வீடு சென்றாள்.

மாளிகையிலே பிரத்யேக மகாநாடு – மண்டபத்திலல்ல – மாளிகையின் பின்புற மாட்டுக்கொட்டகையில்.

“ஆமா! ஏன் எஜமானரு திருதிருன்னு விழிச்சாரு? அந்தத் திருட்டுச் சிறுக்கி படபடன்னு பேசினா. இவர் கையிலே இருந்த தடிக்கம்பாலே அவளைச் சாத்துவதை விட்டு, ஏன் அவ எதிரே, தலையைத் தொங்கப் போட்டுகிட்டாரு?” – மருதாயி, உள்ளபடியேதான், சந்தேகம் போக்கிக்கொள்ளும்விதம் கேட்டாள். இந்தச் சகஜமான கேள்வி ஏனோ, அவள் புருஷன் பொன்னனுக்குக் கோபமுமூட்டிவிட்டது.

“ஏண்டி, உனக்கு கெட்ட எண்ணமும் கேடுகெட்ட புத்தியும் இருக்கு. பாவம், அவரே, என்னமோ, மனசு இளகி, அந்தப் பொம்பளையைச் சும்மா வாய் மிரட்டோடு விட்டாரு. நீ அவளை ஏன் அடித்துக் கொல்லலேன்னு கேட்கறயே ! மனசு ஏண்டி உனக்குக் கல்லாப்போச்சு!” என்றான் பொன்னன், விடுவாளா மருதாயி.