பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

5


மூழ்குவதாகவும் கேள்விப்பட்ட லீலா, ஒருநாள் சென்றாள் மாடுகள் மேயும் இடத்தருகே. குழலோசை அவளுக்கு இன்பமாக இருந்தது, ஒவ்வொரு நாளும் சென்றாள்! குழலின் இனிமையும், கிருஷ்ணனின் திறமையும் அபிவிருத்தி அடையத் தொடங்கிற்று. அதுமட்டுந்தானா? கிருஷ்ணனுடைய, நடை உடை பாவனையும் வயற்காட்டு ரகமாக இருந்தது மாறி வயற்காட்டுச் சீனுக்கு உடை தரிக்கும் இராஜபார்ட்டுக்காரருடையது போல மாறிக் கொண்டே வரத் தொடங்கிற்று! அன்று கிருஷ்ணன், லீலாவிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்று அதிக ஆவல் கொண்டிருந்தான். ஆனால் அன்று என்னமோ லீலாவுக்கு அவசரமான வேலை, அதிக நேரம் குழலைக் கேட்கவில்லை, போய்விட்டாள். அவளே போய்விட்ட பிறகு, இந்த அநாவசியமான பசுக்களுக்கு இங்கென்ன வேலை என்ற கோபத்திலேதான், மந்தையை ஊருக்கு விரைவாக ஓட்டிக் கொண்டு போனான், மனச் சங்கடம் கொண்ட மந்தை மன்னன்!

கிருஷ்ணன், தனி மனிதன், அதாவது காதலியைத் தேடித் தீரவேண்டிய கஷ்டமான கட்டத்திலே இருந்தவன்! காளையைக் கழுவி விடவும், பசுவுக்குப் புல்லிடவும், உதைக்கும் மாட்டுக்கு உத்தாவு தரவும், வலிகொண்ட வளைந்த கொம்பனுக்குச் சூடிடவும், வேறு ஆட்கள் இருந்தனர். கிருஷ்ணன், இவர்களுக்குத் தலைவன் மந்தையோடு செல்வது, மதுரகீதம் பொழிவது, இரவிலே இருதயத்துக்கு, “இன்னம் கொஞ்சம் பொறு, நெஞ்சமே! பொறுத்தார் பூமியாள்வார்!” என்று புத்தி கூறுவது, என்ற முறையிலே காலந்தள்ளி வந்தவன். மாட்டுப்பண்ணை விஷயமாகப் பிரத்யேக அறிவும் அனுபவமும் பெற்றவனென்று சிபார்சுக் கடிதம் பெற்றவன், சாதாரண ஆளிடமல்ல, சந்திபுரம் ஜெமீன்தாரிடம். அந்தக் கடிதமே, வேலையை அவனுக்குத் தரவைத்தது. சம்பளமோ அதிகம் தேவையில்லை என்று கூறிவிட்டான்! ஜெமீன்தாரர், கிருஷ்ணனுக்கு வேலை தந்ததற்கு அதுவும் ஒரு