பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றவாளி யார்?

63


தான், ஆத்தா எதிரிலே. இதோ பார்! தாலிகூடக் கட்டினான். இந்த ஊரிலே இருந்தாத்தான் ஏளனமாகப் பேசுவாங்க, வா, நாம் வேறே ஊருபோவோம் அங்கு புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்வோனு சொன் னான், புறப்பட்டோம் — ஊர் கோடியிலே, நீ ஏவின வேட்டை நாய்களிடம் பிடிபட்டோம் — வேலனை அவர்கள் துடிக்க அடித்தனர் — என்னை விசாரணைக்குக் கொண்டு வந்து விட்டனர். நான் படவேண்டிய அளவு வேதனை பட்டாயிற்று விசாரணை நடக்கட்டும், ஊரறிய உலகறிய — உள்ளது அத்தனையும் வெளியாகட்டும்னு துணிந்துதான் பேசினேன். உன் அண்ணன் கோழை — எங்கே வெளியாகுதோன்னு பயந்து கிடக்கிறான். நீயோ, வேலன் கிடக்கறான் உடல் வீங்கிப்போய், ஓட இருந்தவளைக் கொண்டு வந்தாச்சி, இனி நமக்கு வேட்டை தான் என்று நினைக்கறே, நான் என்ன தீர்மானத்தோடு இருக்கிறேன் தெரியுதா?”

“என்னடி மிரட்டறே!‘’

தெளிவான பேச்சு இவ்வளவு தான்! பிறகு அமளி! வெற்றி அந்தப் பெண்ணுக்கு! காமுகன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்!

“வேலா! போனது போகட்டும். அந்தப் பெண்ணை நான் மன்னித்து விடுகிறேன். நீ அவளைப் பெண் ஜாதியாக்கிக்கொண்டது நல்லதுதான். வேறே ஊருக்கு, விடிவதற்குள்ளே புறப்படணும். நம்ம வண்டி ரெடியா இருக்கும். கிளம்பு. வண்டிக்காரனிடம் இரகசியமாக விஷயத்தைச் சொல்லி இருக்கிறேன். பொழுது விடிந்தா, இந்தக் கிராமத்துப் பயலுக, கண்டது கண்டபடி பேசும். விபசாரம் போனவளைத் தாண்டித்தாகணும்னு பேசுவானுக. அதனாலே... ...‘’ — மல்லீசுரர் வேலனிடம் பேசிக்கொண்டிருந்தார் இதுபோல். ஓரு கோரச் சத்தம் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்!

“யாரோ — கிணற்றிலே......” என அலறினான் வேலன்!