பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்வதை எழுதேண்டா!

67


முதலியார் என்றால் தேசமே நடுங்கவேணும். கவர்னர் பங்களாவை விலைக்கு வாங்கணும், இப்படி எல்லாமிருக்கும்” என்று வர்ணித்தார். எழுதுவதை நிறுத்திவிட்டு, மண்டு “ஏம் மாமா! அவ்வளவு பேராசைக்காரனா! அப்படிப்பட்டவனுக்கு சர்வாபிஷ்ட சித்திரஸ்து சொல்றேளே?” என்று கேட்டான். “சொன்னதை நீ எழுதேண்டா. நான் சொன்னா அவன் ஆசை எல்லாம் சித்தி ஆகிவிடறதோ, அவனுக்கு அதனாலே இலாபம் இல்லை. அந்த வார்த்தையைச் சொல்றதாலே நமக்கு நஷ்டம் என்ன? சும்மா எழுதி அனுப்பினா, பய, பல்லிளிப்பான், வேறே என்ன? எழுது!” என்றார், எழுதினான். ராகவாச்சாரி மேலும் சொல்ல ஆரம்பித்தார், “நான் எவ்வளவு கஷ்டம் நேரிட்டாலும் பிறத்தியாரிடம் சொல்கிற வழக்கமே கிடையாது.” இதைச் சொன்னதும், மண்டு, எழுதவில்லை, சிரித்தான்.

“மாமா! என்ன போடு போடறீர். வாசல் கூட்டுகிறவளிடமிருந்து வருகிறவா போகிறவா ஒவ்வொருவரோடும் கஷ்ட சமாசாரம் சொல்லத்தானே உமக்குப் பொழுது இருக்கு. பிறத்தியாரிடம் சொல்றதே கிடையாதுன்னு எழுதச் சொல்றீரே” என்று மாமாவைக் கேட்டான். மண்டுதானே அவன்! மாமாவின் பிரத்யேக முறைகள் மாமி காதிலே வைர ஓலையாகவும், ருக்கு கழுத்தில் லாங் செயினாகவும், பெரிய மருமான் கையில் ரிஸ்ட் வாச்சாகவும், விளைந்ததை அவன் அறிவானா? மாமா, எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் அவனுக்கு விளக்க முடியும்! முறைத்துப் பார்த்தார், அவன் எழுதினான்.

“என் மகன், பஞ்சு, பி. ஏ. வகுப்பிலே படிக்கிறான் என்பது தங்களுக்குத் தெரியும்” என்றார், பேசாமல் எழுதினான். மண்டு. “ஏண்டா இதற்கு ஒண்ணும் கேட்கலையோ? எப்படிப் பஞ்சு என்று கூறலாம், அவன்தான் ஆர். பி. நாதன் என்று கையெழுத்துப் போடுகிறானே, எனக் கேட்பதுதானே” என்று கேலி செய்தார், ராகவாச்சாரி. பஞ்சநாதன், மகன் பெயர். இவர் அதைத்தான் பஞ்சு என்று குறிப்பிட்டார், அன்புச் சுருக்கமாக.