பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்வதை எழுதேண்டா!

69


வேண்டும் என்று கூறச் செய்பவர். ராகவாச்சாரியார், புதிய முறைப் புரோகிதர்தானே! “தங்களுடைய தர்ம சிந்தனையையும், தயாள குணத்தையும்.........” என்று சொன்னார் ராகவாச்சாரி, எழுதிவிட்டான் மண்டு, வாசகத்தை முடிக்காமல் யோசிக்கலானார் ராகவாச்சாரி. “ஏன் மாமா தயாள குணத்தையும், எழுதிவிட்டேன்” என்றான் மண்டு. “இரடா! ஸ்துதி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அதிலும் அந்தப் பயலுக்கு உச்சி குளிரும்; தர்ம சிந்தனை, தயாள குணம், போதாது, இன்னும் ஏதாவது சேர்க்கணும்; என்ன போடலாம், சொல்லேன் நீதான்” என்று மண்டுவையே கேட்டார். “பிராமண பக்தின்னு போடுவமா?” என்று யோசனை சொன்னான் மண்டு. “பித்துக் குளி! அந்த வார்த்தையைப் போடவேபடாது. இப்போ பிராமண பக்தின்னாலே, கேலி பேசறவா ஊரெல்லாம் அதிகமாகிவிட்ட காலம். இவன் கூடத்தான், ஏதோ நமக்கு சமயாசமயத்திலே ஒத்தாசை செய்கிறானே தவிர, மத்தவாளிடம் பேசறபோது, “இந்தப் பார்ப்பாரப் பயலுக” என்று தான் நம்ம சமூகத்தையே வைகிற வழக்கம். ஒரு தடவை, அவன் திமிரைப் பார்டா, என் எதிரிலேயே வைதான்” என்று திவான் பகதூரின் குணத்தை விளக்கினார் ராகவாச்சாரி. “உம்ம எதிரிலேயா? சும்மாவா இருந்தீர் மாமா?” என்று கேட்டான் மண்டு. “சும்மா. இராமே அவனிடம் சண்டைக்கு நிற்பாளா? காரியம் பெரிசா? வீரியம் பெரிசா? நான் பேசாமே கேட்டுண்டு தான் இருந்தேன். அவனுக்கே பிறகு, நான் இருக்கிறேனே, ஒரு சமயம் கோபிப்பனோன்னு சந்தேகம். உடனே என்னைப் பார்த்தான், சிரிச்சிண்டே “ஏன் சாமி! நம்ம சமூகத்தைக் கொறை பேசறானே இவன்னு கோவமா?” என்று கேட்டான். “அதெல்லாம் இல்லை, முதலியார்வாள்! லோகாச்சாரப்படிதானே சொன்னேள்” என்று ஒரு போடு போட்டேன். பயலுக்குப் பிரமாதமான திருப்தி. “உங்க விஷயம் தனி, சாமி. உங்களைப்போலவே குணமும் மனமும் உள்ள பிறாமணாளைக் குறை சொல்லலே, மத்ததுகளைத்தான் திட்டினேன்”