பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அண்ணாவின் ஆறு கதைகள்


என்று சமாதானம் பேசினான், வழக்கமாகத் தருவதைவிட அன்று ஒரு பத்து ரூபாய் அதிகமாகத் தந்தான். அதாவது நம்ம நரசிம்மாச்சாரியார் இங்கே “இராமாயணம்” படித்தாரே, அந்தப் பட்டாபிஷேகச் செலவுக்கு. அப்படிப்பட்டவன் அந்த திவான் பகதூர் என்று கூறினார் ராகவாச்சாரி. மேலும் சிறிது யோசனைக்குப் பிறகு, தருமசிந்தினை தயாள குணத்துடன், பகவத் கடாட்சம் பெற்ற என்ற பதத்தைச் சேர்த்தார், வாசகத்தைப் பூர்த்தி செய்ய. “பகவத் கடாட்சம் பெற்ற தங்களைப் போன்றவாளுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை” என்று கூறினார். கடிதம் முடிந்தது. மண்டு சோம்பல் முறித்தான். ராகவாச்சாரி, “கையோடு கையா இன்னும் ஒரு லெட்டர் எழுதி விடு, பஞ்சுவுக்கு” என்றார். மண்டு எழுத உட்கார்ந்தான். “ஜர்னலிஸ்டு” லெட்டர் பேப்பர் எடுடா” என்றார். “சிரஞ்சீவி பஞ்ச நாதனுக்கு, ஆசீர்வாதம். இன்று இதே தபாலில், திவான் பகதூர் தீர்த்தகிரி முதலிக்கு ஒரு லெட்டர் எழுதி இருக்கேன், உனக்கு அவசரமாக ஐம்பது ரூபாய் தரும்படி; தருவான். அதை வாங்கிக்கொண்டு, உனக்கு ஐந்தோ பத்தோ செலவுக்குத் தேவையானால் எடுத்துக் கொண்டு, மிகுதிப் பணத்துக்கு, ஆறு கெஜத்தில் ஆரஞ்சு கலரில் பெங்கால் சில்க் சேலை விற்கறதாமே சைனாபஜாரில், அதை உன் அக்காவுக்காக உடனே வாங்கி அனுப்பவும். அடுத்த வியாழக்கிழமை இங்கே ஜில்லா கலெக்டர் வருகிறார், என்னமோ சையன்யத்துக்கு நிதி திரட்டவாம். அதிலே நம்ம ருக்கு, எதிராத்து ராஜம், நம்ம கோடிவீடு செவிட்டுச் சீமாவின் பார்யா இருக்காளே சண்பகம், இவாளெல்லாம், பெங்கால் டான்ஸ் ஆடப்போறாளாம். ஆனதாலே புடவை அவசரம். தீர்த்தகிரி முதலி கொஞ்சம் முன்கோபி. வள்ளுன்னு விழுவான். சட்டை செய்யாமே, கொஞ்ச நேரம் இருந்தா, பணத்தைத் தந்துவிடுவான். பக்குமாப் பேசனும் அவனிடம்: முகஸ்துதியிலே ரொம்பப் பிரியம். பெரிய கர்மி. இருந்தாலும், நம்மிடம் பணம் தருவதற்கு மறுக்க மாட்டான். அவன் தான் நம்ம ராமபக்த ஜனசபாவுக்குப் போஷகன். திவான்பகதூர் பட்டம்.