பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

7


கணக்கப்பிள்ளை வேலைக்காவது வைத்துக் கொள்வார்” என்று சிலர் பரிதாபப்படுவதுண்டு.

“பைத்தியக்காரர்கள், மோட்டார் கம்பெனி ஏஜண்டாக இருக்க மாதம் இருநூறு தருவதாகச் சொன்னார்கள். முடியாது என்று கூறிவிட்டேன். மில்லிலே ஒரு வேலை இருப்பதாகச் சொன்னார்கள், வேண்டாம் என்று கூறி விட்டேன். இந்த மந்தை மன்னன் வேலைக்கு நான் வந்தது மதியற்ற செயல் என்று மதியிலிகள் நினைக்கின்றனர். வேலை ஏன் எனக்கு! குழலை ஊதிக் கொம்புள்ள பிராணிகளிடம் குதூகலத்தை ஊட்டுவதை விட்டு, சபைகளிலே சென்று என் திறமையைக் காட்டினால் வித்வானாகி விட முடியாதா, பணம் குவியாதா? நானாக, மனமுவந்து, இந்த வேலையைத் தேடிக்கொண்டேன். இந்த மட்ட ரகங்களுக்கு என் திட்டம் தெரியவில்லை, இவர்களைச் சட்டை செய்யப் போவதில்லை” என்று கூறுவான், கிருஷ்ணன், தன்னுடைய பட்டி ஆட்களிடம்.

“இது ஒரு தினுசான பைத்யம்!” என்ற முடிவுக்கு ஊரார் வந்துவிட்டனர்; உண்மைக்கும் ஊரார் நினைப்புக்கும் உறவு இருந்தது! அவனுக்கு ஒரு தினுசான பைத்யமிருந்தது உண்மைதான்! அந்தப் பித்தம், அலைகடலுக்கு அருகே, மணல் மேட்டின் மீது, அழகிய நிலவொளியிலே அவன் கேட்ட ஒரு அற்புதமான கதையினால் ஏற்பட்டது!!

“அடி அமிர்தம்! படித்து முடித்துவிட்டாயா அந்தக் கதைப் புத்தகத்தை” என்று கேட்ட லீலாவின் குரலிலே தோய்ந்திருந்த இனிமை, மணலைக் குவித்துத் தலையணையாக்கி, மனதை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, இருக்குமிடம் தெரிந்தால் இன்பமான மாலைக் கனவுக்குப் பங்கம் வந்துவிடுமே என்ற பயத்தால் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்த வாலிபனுக்கு விருந்தாக இருந்தது, கண்களைத் திறந்தான், குரல் வந்த திக்கை நோக்கினான், இரண்டு இளமங்கைகள், பேசிக்கொண்டிருக்கக்