உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

கத்தைப் பற்றி விவாதிக்க வேண்டுமே தவிர நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்த வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது" என்பதைச் சொன்னார்கள்; அந்தத் தீர்மானத்தை நாங்களும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதுடன், அதற்கு மாறுபட்டு இங்கு நடந்து விட்டதற்கு எங்கள் வருத்தத்தையும் எங்கள் கழகத்தின் சார்பில் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கலவரம் சம்பந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் மீது நீதிமன்ற விசாரணை தேவையில்லை என்று கனம் அமைச்சர்கள் சொல்லும்போது, "அது தேவை" என்று வற்புறுத்த விரும்புகிறோம். ஆனால் அதை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் வற்புறுத்துவோமானால் இரண்டு மந்திரிகளின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் வற்புறுத்துபவர்கள் ஆவோம்; அப்படிச் செய்து அதன் விளைவுகளுக்கு கனம் அமைச்சர்களை உட்படுத்த விரும்பவில்லை. இந்தக் காரணங்களினால், இந்தச் சர்க்காரின்போக்கை நீதி விசாரணை அமைக்க ஒப்புக்கொள்ளாததற்காக கண்டிக்கும் முறையில் நானும் என்னுடைய கட்சி உறுப்பினர்களும் இப்போது இந்த மன்றத்தை விட்டு வெளியேறுகிறோம் (ஆரவாரம்). (All the D. M. K. Members staged a walk out.)

🞸⁠🞸⁠🞸⁠🞸

5—11—1957]

[செவ்வாய்க்கிழமை

(வெள்ளை அறிக்கையின் பேரில் நடைபெற்ற விவாதத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு)

சட்டமன்றத் தலைவர் அவர்களே, வெள்ளை அறிக்கையின் பேரிலே நடைபெற்று வருகின்ற இந்த விவாதம்--முடிந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற கட்டத்தில்—இல்லாமல்--நாம் எடுக்க இருக்கிற முடிவுகள் நாட்டுக்குத் தேவைதானா என்று அலசிப் பார்ப்பதற்குப் பயன்படும் என்று நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதை நான் மெத்த நம்பிக்கையோடு வரவேற்கிறேன். ஏன் நம்பிக்கையோடு வரவேற்கிறேன் என்று நான் கூறுகிறேன் என்றால், கனம் சின்னத்துரை அவர்கள் எடுத்துச் சொன்னபடி, ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்ட ஒரு முடிவின் பேரில் அப்படி முடிவு எடுக்கப்பட்டதன் காரணமாக, இங்கே ஒப்புக்கு ஒரு விவாதத்தை நடத்துகிறார்களோ என்று ஐயப்படுகிற விதத்தில் மதுரை மாவட்டத்தில் ஒரு இடத்தில், அவர்கள்