உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

டால்தான் சமுதாய அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்று நிதி அமைச்சரவர்கள் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அதே தத்துவத்தை அவர் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருப்பாரேயானால் பொதுமக்கள் எந்த நேரத்தில் ஆதரவு தருகிறார்கள். எந்த நேரத்தில் ஆதரவு தர மறுக்கிறார்கள் என்பதை அவர் கொஞ்சம் உணர்ந்து கொண்டிருக்க முடியும். எந்த இடத்தில் சமுதாய நலத்திட்டத்தினால் போடப்படுகிற திட்டம் சரியான முறையில் நடைபெறும், நல்ல திட்டம் என்கிற அபிப்பிராயம் பொதுமக்களுக்கு உண்டாகிறதோ அந்த இடத்தில் அவர்கள் ஆதரவு தந்து உற்சாகமாகத் தாங்களும் பங்குகொண்டிருக்கிறார்கள். எந்த இடத்தில் இவர்கள் போடுகிற திட்டம் நன்றாக நடைபெறாது. இது வெறும் கண்துடைப்பு, மெழுகுப் பூச்சு என்கிற அபிப்பிராயம் அவர்களுக்கு உண்டாகி விடுகிறதோ அங்கேயெல்லாம் அவர்கள் ஆதரவு கிடைப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். இதை நான் நடைமுறையில் பாத்திருக்கிறேன் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை இந்த அவையில் மன்றத் தலைவரவர்களே உங்கள் அனுமதியுடன்—சொல்லுவது பொருத்தமானதாக இருக்குமென்பதால் சொல்ல ஆசைப்படுகிறேன்.

நிதி அமைச்சரவர்களுடைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கவுந்தப்பாடி, சவுந்தப்பட்டு கிராமத்தில் சமுதாயநல அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழங்குடி மக்களுக்கு 47 வீடுகளுக்குமேல் கட்டப்பட்டிருக்கிறது. அந்த வீடுகளை நிதி அமைச்சர் அவர்களே திறந்து வைப்பதாக இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இவர் திறந்து வைக்கச் செல்லவில்லை. அவர் திறந்துவைப்பதற்கு ஏற்ற அளவில் இல்லாமல் அவை கட்டிய சிறிது காலத்திற்குள்ளாகவே அலங்கோலமாகிவிட்டன. 47 வீடுகளில் 26 வீடுகள் கீழேவிழுந்து அலங்கோலமாகக் கிடந்தன. அதைக் காண்பதற்கு என்னை அழைத்திருந்தார்கள். நான் பேசும்போதும் குறிப்பிட்டேன். இந்த அலங்கோலக் காட்சியைக் காண்பதற்கு நிதி அமைச்சரை அழைக்காமல் என்னை அழைத்திருப்பதே நல்லது—என்று குறிப்பிட்டேன். நிதி அமைச்சரவர்கள் அந்த மாவட்டத்திற்குச் செல்லும் காலத்தில் அவசியம் அந்த இடத்தைப் போய்ப் பார்க்கவேண்டும் என்பதாகக் கேட்டுக்கொள்கிறேன்.

14