உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

கொண்ட திட்டங்களாகவே அவை அமைவன. ஆனால் ஸ்தல ஸ்தாபனங்கள் என்பது நிரந்தரமான ஒரு திட்டம். நிரந்தரமான ஓரு திட்டத்தோடு நிரந்தரமில்லாத திட்டத்தை பிணைப்பது ஒரு டப்பிக்குள் இன்னொரு சின்ன டப்பியைப் போடுவதாகத்தான் இருக்கும். இது அதோடு பொருந்தாது. உள்ளேயிருந்து ஓசையைத்தான் எழுப்ப உதவும். பந்தோபஸ்தாக இருக்காது என்கிற காரணத்தினால் ஸ்தல ஸ்தாபனங்களின் பிரச்னை தனி, சமுதாய நல அபிவிருத்தித் திட்டங்களின் பிரச்னை தனி, இரண்டையும் ஒன்றாகப் பிணைப்பது சரியல்ல என்று கூறி சட்டசபைக் கமிட்டியில் ஸ்தல ஸ்தாபனங்களை நல்ல முறையில் சீர் அமைப்பது பற்றி ஆலோசிப்பார்கள் என்று நம்பி முடித்துக்கொள்கிறேன்.

🞸⁠🞸⁠🞸⁠🞸

11—11—1957]

[திங்கட்கிழமை

[தேசீய அவமதிப்புத் தடுப்பு மசோதா தேவையா என்ற விவாதத்தில் மறுத்துப் பேசியது.]

சட்டமன்றத் தலைவரவர்களே, இன்றுவரையில் குற்றங்கள் என்று கருதப்படாமல் இருந்துவந்த சில செயல்கள், இனி மூன்று ஆண்டுகளுக்கு தண்டிக்கத்தக்க கடுமையான குற்றங்கள் என்று தெரிவிக்கும் இந்த மசோதாவை நான் தீதானது, தேவையற்றது, கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது என்று கூறி கண்டிக்கிறேன் என்று சொன்னால், நான் இந்தக் காரியங்களிலே பங்கு எடுத்துக்கொள்ளுகிறவன் என்று நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இதனை வார்த்தையால் மட்டும் சொல்லவில்லை. முன்பு ஒரு சமயத்திலே தேசீயக் கொடி எரிக்கப் படவேண்டும் என்ற கிளர்ச்சி நடந்த நேரத்திலே நான் அதிலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்ல, அது தவறானது என்று வெளிப்படையாக கண்டித்தேன். ஆகையினால் நான் இன்றைய தினம் இந்தச் சபையின் முன்னாலேயிருக்கிற இந்த மசோதா தீதானது, தேவையற்றது, கொடுங்கோன்மைக்கு வழிகோலுவது என்று கூறினால், அதன் மூலமாக தேசீய சின்னத்தை, தேசீய கௌரவத்தைப் பங்கப்படுத்தவேண்டுமென்று நான் வாதாடுகின்றேன் என்று பொருளல்ல தேசீய கெளரவம் என்பது பரம்பரை பரம்பரையாக நாட்டு மக்கள் உள்ளத்திலே ஊடுருவிப் பாயவேண்டியதொன்றாகும் சட்டத்தின் மூலம் தேசிய கெளர-