119
அவர்களால் அந்தச் சட்டத்தினுள்ள குறைபாடுகள் திருத்தப்பட்டால் அது புனிதமானதாகவும், மிகச் சிறுபான்மையோராகயிருக்கக் கூடியவர்கள் அதிலுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டுமென்று சொன்னால் அது குற்றமாகவும் ஆகுமா? மிகப் பெரும்பாலோராகயிருக்கக் கூடியவர்கள் ஒரு காரியத்தைச் செய்யத்துணிந்த பிறகு, மிகச் சிறுபான்மையோராக இருக்கக் கூடியவர்கள் அந்தக் காரியத்தையே செய்ய முற்படும்போது சட்டத்தினால் மட்டும் அப்படிச் செய்யக்கூடாது என்று தடுத்துவிட முடியாது; சட்டங்கள் இயற்றலாம்; சட்டங்கள் இயற்றப்படுவதால் மட்டும் எந்தச் செயலையும் அடியோடு நிறுத்திவிட முடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சட்டமியற்றப் பழக்கப்பட்டவனல்ல நான், மனதிற்கு சரியென்றுபட்ட காரியத்திற்காக அவசியமென்று ஏற்பட்டால் சட்டம் குறுக்கிடுமென்று நம்பினால், அந்தச் சட்டத்தை துச்சமென்று மதிக்கிறவர்கள் தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நீங்கள் சட்டத்தை நிறைவேற்றிவிட்டாலும், ஆனால் 10 ஆயிரம்பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்று ஆண்டு அல்ல முப்பதாண்டல்ல சிறையில் இருக்கத் தயங்க மாட்டார்கள். அமெரிக்க நாட்டிலோ, பிரான்ஸ் நாட்டிலோ, ரஷ்ய நாட்டிலோ ஒரு சமுதாயத்தை இப்படியெல்லாம் அவர்கள் கருத மாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வளவோ மாறுபட்ட கருத்துக்களுள்ளன. யார் தேசீயத் தலைவரென்று ஏற்றுக் கொள்வதிலே இன்னும் விவாதம் இருக்கிறது. சிறைக்குச் செல்பவர் 10 ஆயிரம் பேரென்று அங்குள்ளவர்கள் கருதுவார்களே தவிர, அது நீங்கள் எதிர்பார்க்கிற கவுரவத்தைக் காப்பாற்றுவதாகாது, நான் உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்—பெரியாரவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தை தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழைய கால நடவடிக்கைகளை உங்களுக்கு ஏற்பட்ட தொடர்புகளையும் ஒருகணம் எண்ணிப்பாருங்கள். அவர்களை சுலபத்திலே பயித்தியக்காரரென்று சொல்லிவிடுவார்களேயானால், நாமெல்லாம் எந்தெந்த காலத்தில் எப்படி பயித்தியக்காரர்களாகி விடுவோமோ என்று தோன்றுகிறது, அப்படி அவரை பயித்தியமென்று சொல்வதற்கு அவர் எடுத்துச் சொல்வதுதானென்ன? அவர்கள் சொல்வதத்தனையும் ஜாதி ஒழிய