உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

வேண்டுமென்பதுதானே. ஜாதி இருக்கவேண்டுமென்று இந்தியநாட்டு பிரதம மந்திரி பண்டித நேரு கருதவில்லை. 10 நாட்களுக்கு முன்னால் ஒரு வாலிபர்சங்க விழாவில் பேசும்போது நேரு சொன்னார் "India is entering into the threhold of the Third India from the Second India of Casteism superstitution methodoxy and narrowmindedness" என்று தெளிவுபட எடுத்துப் பேசியிருக்கிறார். மூன்றாவது இந்தியாவை பெறுவதற்கு நீங்கள் தயாரிக்கப்படுகிற நேரத்தில், அவருடைய முறையீடுகளை கவனிக்காத நேரத்தில், மக்கள் அழுகிற குரலை கவனிக்காத நேரத்தில், சிறு சிறு கிளர்ச்சிகளை கவனிக்காமல் இருக்கிற நேரத்தில், பண்டிதநேரு வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்லிய அந்த வாக்கியத்தை நான் ஆதாரம் காட்டி உங்களைத் தெளிவாக்கலாமென்று கருதுகிறேன். பெரியார் ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்கிறார். பெரியாரவர்களை நீங்கள் பித்தம் பிடித்தவரென்று கருதலாமேதவிர உலகத்தில் பெரும் பகுதியினர் அவ்வாறு கருதவில்லை. உங்களுக்கு இருக்கிற அதிகார பலத்தைக்கொண்டு நீங்கள் சட்டத்தை நிறைவேற்றலாம், ஆனால் அது உங்களுடைய பலவீனத்தைக் காட்டுமே தவிர உண்மையான பலத்தைக் காட்டாது. மூன்று ஆண்டுகள் சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க. இந்திய அரசியல் சட்டத்தை கண்ணில் ஒத்திக் கொள்ளவேண்டுமென்று சொல்லுகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் கர்த்தாவாகிய காலம் சென்ற டாக்டர் அம்பேத்கார் அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார், "இந்த அரசியல் சட்டத்தில் பலவேறு கோளாறுகள் இருக்கின்றன. இது எரிக்கத்தக்கது" என்று "நீர்தானே இந்தச் சட்டத்தை செய்தவர்" என்று சிலர் அவரைக் கேட்க “நீங்கள் சொல்லி செய்யப்பட்டதே தவிர ஏற்றுக்கொள்ள முடியாத, மனதிற்கு ஒவ்வாத பல கருத்துக்கள் இருக்கின்றன" என்று சொன்னார்கள். அரசியல் சட்டத்தில் இன்றைய தினம் உள்ள நாக நாட்டு நிலைமையைப் பற்றி நாளைக்கு ஒரு திருத்தம் கொண்டுவர இருக்கிறார்கள். இந்த 7 ஆண்டுகளிலே அரசியல் சட்டத்தில் 10 தடவைகள் திருத்தங்கள் கொடுத்திருக்கிறார்கள். திருத்தங்கள் கொடுப்பது என்பது நாகரீகமான முறையில் சட்டத்தை கொளுத்துவதாகும். திருத்துகிறோம் என்ற பெயரால் 10 தடவை கொளுத்தியிருக்கிறீர்கள் அந்தச் சட்டத்தை. மேலும் வெள்ளைக்காரனுடைய துணியை கொளுத்தினீர்கள் என்றால் வெள்ளைக்காரர்களையே கொளுத்துவது என்று அர்த்தமல்ல. அந்தத் துணிகளைக் கொளுத்துவதன் மூலம்